முகப்பு
புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்: பயிற்சி பெற முடியாமல் வீரர்கள் தவிப்பு

புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீரை சுத்தம் செய்யும் உபகரணம் மற்றும் குளத்தினுள்

Updated On : 25 நவம்பர், 2016 at 8:53 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:17 AM

புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீரை சுத்தம் செய்யும் உபகரணம் மற்றும் குளத்தினுள் பதிக்கப்பட்டுள்ள கற்கள் ஆகியவை சேமடைந்துள்ளதால் நீச்சல் வீரர்கள், பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
வலிமையான உடல்தான் வளமான சிந்தனைக்கு அடித்தளம். வலிமையான உடல் அமைய முறையான உடல் பயிற்சியும் விளையாட்டுகளும்தான் உதவுகின்றன. இதனால்தான் அரசு உடற்கல்வி பாடத்தை மதிப்பெண் கடந்த கட்டாயப் பாடமாக பள்ளிகளில் வைத்துள்ளது. மேலும், விளையாட்டு போட்டிகள் மாணவர்களிடத்தில் தலைமைப் பண்பு, உடல் திறன், தன்னம்பிக்கை, வெற்றி தோல்விகளை சம நோக்கில் எதிர்கொள்ளும் மனப்பான்மை போன்ற பண்புகளை வளர்க்க உதவும். இத்தகைய சிறப்புகளை விளையாட்டுத் துறை தாங்கி நிற்கிறது.
இந்நிலையில், புதுக்கோட்டையில் ரூ. 1 கோடி செலவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கடந்த 3.9.1998-ம் ஆண்டு விளையாட்டரங்கம் திறக்கப்பட்டது.
இங்கு கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக், குத்துச்சண்டை, நீச்சல் போன்ற விளையாட்டுகளுக்குப் பயிற்சி பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வளாகத்தில், பல லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளும், நூற்றுக்கணக்கான மாவட்ட, மண்டல நீச்சல் வீரர்களும் பயிற்சி பெற்று வந்தனர். மேலும், இங்கு, மாநில அளவிலான நீச்சல் போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்நிலையில், இந்த நீச்சல் குளத்தில் கடந்த 3 மாதங்களாக நீரை சுத்தம் செய்யும் உபகரணம் மற்றும் குளத்தினுள் உள்ள டைல்ஸ் கற்கள் சேதமடைந்துள்ளதால் அங்கு நீச்சல் பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
நீச்சல் குளம் சேதமடைந்துள்ளதால், கடந்த சில நாள்களுக்கு முன் இங்கு நடைபெற இருந்த மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள், திருச்சியிலுள்ள மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் நடத்தப்பட்டன. இதனால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர்களுக்கு வீண் அலைச்சலும், கால விரயமும் ஏற்பட்டது. இச்சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் சேதமடைந்துள்ள நீச்சல் குளத்தை சீரமைக்க வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ். வாஞ்சிநாதன் கூறுகையில், நீச்சல் குளத்தை பழுது பார்க்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்த பிறகே சீரமைக்கும் பணிகள் தொடங்கும் என தெரிவித்தார்.
இதுகுறித்து சமூக ஆர்வலரும், ஓய்வு பெற்ற போராசிரியருமான சா. விஸ்வநாதன் கூறியது:  
 விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சரியான களமாக இந்த விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. தொடக்கத்தில் அனைத்துப் பிரிவுகளுக்கும் பயற்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதனால் வீரர்கள் பயனடைந்தனர். ஆனால், சில ஆண்டுகளாக நிரந்தரப் பயிற்சியாளர்கள் யாரும் இல்லாத நிலை உருவானது. இதுகுறித்து அரசின் கவனத்துக்கொண்டு சென்றதையடுத்து  ஹாக்கி, தடகளம், நீச்சல், பளுதூக்குதல் ஆகிய பிரிவுகளுக்கு  தற்காலிகமாகப் பயிற்சியாளர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். சுமார் 7 விளையாட்டுகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கான அரங்குகள் உள்ள நிலையில் அதற்கான பயிற்சியாளர்கள் இல்லாததால் சிறந்த வீரர்களை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கோடிக்கணக்கான நிதி செலவழித்து அமைக்கப்பட்ட இந்த விளையாட்டு அரங்கில், வீரர்களை உருவாக்கும் வகையில் உரிய பயிற்சியாளர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.