விராலிமலையில் உதவி ஆய்வாளர் போன்று போலி கையெழுத்து: கோவை பெண் உள்பட 3 பேர் கைது
கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் காணாமல் போன தனது நிலத்து பத்திரத்திற்கு பதிலாக புதிய பத்திரம் பெறுவதற்கு உதவி ஆய்வாளர் போன்று போலி கையொப்பமிட்ட சம்பவத்தில் பெண் உட்பட மூவரை
கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் காணாமல் போன தனது நிலத்து பத்திரத்திற்கு பதிலாக புதிய பத்திரம் பெறுவதற்கு உதவி ஆய்வாளர் போன்று போலி கையொப்பமிட்ட சம்பவத்தில் பெண் உட்பட மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோயம்புத்தூர் எஸ்.எச்.எஸ் காலனி, தாமரை நகரைச் சேர்ந்தவர் சங்கீதா. இவரது நிலம் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போன நிலையில் மீண்டும் புதிய ஆவணம் பெறுவதற்கு முயன்றுள்ளார். அப்போது அவரை அனுகிய கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த மனோகரன், பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் பத்திர ஆவணங்கள் காணாமல் போனதுபோல் போலி சான்று தயார் செய்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொடுக்கலாம் என யோசனை கூறியுள்ளனர்.
இதற்கு சங்கீதா சம்மதம் தெரிவித்ததையடுத்து புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சங்கீதாவின் நில பத்திரம் காணாமல் போனது போலவும், இது தொடர்பாக இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது போலவும், அதற்கு சான்றாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பணியாற்றிய பாலமுருகன் என்ற உதவி ஆய்வாளர் கையொப்பமிட்டது போல் காணாமல் போனதற்கான போலிஸ் சான்றிதழை தயார்செய்து அதனை கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
அந்த காணாமல் போன சான்றை பார்த்த கிணத்துக்கடவு சார் பதிவாளருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து இதுகுறித்து உண்மைத்தன்மையை அறிய இலுப்பூர் காவல் நிலைய ஆய்வாளருக்கு அந்த சான்றிதழை தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளார். இதனைப் பார்த்த இலுப்பூர் காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சான்றிதழில் கையொப்பமிட்டதாக கூறப்படும் பாலமுருகன் தற்போது இந்த காவல் நிலையத்தில் பணியில் இல்லாததும் அவரின் கையெழுத்து போலியாக போடப்பட்டு இருப்பதும் காவல் நிலைய முத்திரையும் போலியாக தயாரித்து பதிவிடபட்டிருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட இலுப்பூர் போலீசார் தனிப்படை அமைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட கோவையைச் சேர்ந்த சங்கீதா, மனோகரன், ராஜேந்திரன் ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் இவர்களுக்கு உடந்தையாக இரண்டு வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.