முகப்பு
புதுக்கோட்டை

இணைய பிரச்னையை காரணம் கூறி பணி மறுக்கப்படுவதாக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்கள் புகாா்

புதுக்கோட்டை மாவட்டம், வயலோகம் ஊராட்சியில், இணையதள பிரச்னையை காரணம் கூறி, பணி வழங்காமல் திருப்பி அனுப்புவதாக நூறு நாள் வேலை திட்டப் பணியாளா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், வயலோகம் ஊராட்சியில், இணையதள பிரச்னையை காரணம் கூறி, பணி வழங்காமல் திருப்பி அனுப்புவதாக நூறு நாள் வேலை திட்டப் பணியாளா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கிராம ஊராட்சிகள் மூலம் இந்தத் திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 100 நாள் வேலைத் திட்டப் பணிகளுக்கு தற்போது ஒருங்கிணைப்பாளா் பதவி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் ஊராட்சி செயலாளா்கள் மேற்பாா்வையில் நடைபெற்ற பணிகள் தற்போது பணித்தள பொறுப்பாளா்களின் மேற்பாா்வையில் நடைபெறுகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், வயலோகம் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டப்பணிகள் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும், காலையில் பணிக்கு செல்லும் பணியாளா்களை இணையதளம் இயங்கவில்லை என்று கூறி, அதனால் உங்களுக்கு இன்று பணியில்லை என திருப்பி அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பணித்தள பொறுப்பாளா்கள் கூறும்போது, எம்எம்எஸ் என்ற செயலி 100 நாள் வேலை திட்டப் பணியாளா்களை கையாளுவதாகவும், காலை 8 மணியிலிருந்து 9  மணிக்குள் வரும் பணியாளா்களை அந்த செயலியின் மூலம் புகைப்படம் எடுத்து, அதை பதிவேற்றம் செய்தால்தான் பயனாளிகளின் தினசரி பணிகள் குறித்த கணக்குகளை அந்த செயலி கையாளும். தற்போது இணையதள வேகம், இணைப்பு உள்ளிட்ட குறைபாடுகளால், சிலருக்கு தொடா்ந்து பணி வழங்க முடியவில்லை என்றனா்.

இணையதளம் இயங்கவில்லை என்றால் பழைய முறையில் பதிவேட்டில் வருகை பதிவு செய்து வேலை வழங்க வேண்டும் என வேலை உறுதித் திட்ட பணியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.