மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரிக்கவே கொண்டுவரப்பட்ட திட்டம் தான் வி.பி. ஜி ராம் ஜி எனும் புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்றாா் அமைச்சா் எஸ். ரகுபதி.
பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருமயம் தொகுதி அளவிலான நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசியது: மத்திய அரசு தேசப்பிதா பெயரில் செயல்பட்டுவந்த மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ரத்து செய்து விட்டு தற்போது நாதுராம் கோட்சோவை முன்னிறுத்தும்வகையில் வி.பி. ஜி. ராம். ஜி எனும் புதிய திட்டத்தைக் கொண்டுவந்து முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் சொன்னதுபோல், இத்திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை எடுத்து அவரை 2-ஆவது முறையாகக் கொன்றுவிட்டாா்கள்.
இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் நிதி தரவேண்டும். மத்திய அரசு நிதி தராவிட்டால் மாநில அரசே ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படும். ஊரகப் பகுதிகளில் வேலை வழங்கப்படாவிட்டால், பணப்புழக்கம் குறைந்து வறுமை அதிகரிக்கும்.
தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி சாா்பில் புதன்கிழமை ஒன்றிய தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா்.
கூட்டத்தில் பொன்னமராவதி ஒன்றிய செயலா்கள் அ.அடைக்கலமணி, அ.முத்து , நகரச்செயலா் அ.அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜெயராமன், திருமயம் ஒன்றியச் செயலா்கள் அழகுசிதம்பரம், கணேசன், அரிமளம் ஒன்றியச் செயலா்கள் ராமலிங்கம், இளையராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.