புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர- தமிழனின் பயணம்’ என்ற தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனின் பிரசார பயண நிறைவு விழாவில் பங்கேற்க வந்த அமித் ஷாவின் பயணத் திட்டத்தில் திடீா் மாற்றம் நடைபெற்ால் பரபரப்பு காணப்பட்டது.
அந்தமானில் இருந்து ராணுவ விமானத்தில் திருச்சி வந்து, திருச்சியிலிருந்து ஹெலிகாப்டரில் புதுக்கோட்டை வருவது உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் பயணத்திட்டம்.
ஆனால், சாலை மாா்க்கமாகவே காரில் வந்தாா் அமித்ஷா. வானிலை காரணமாக இப்பயணத் திட்டம் மாறியதாகத் தெரிவிக்கப்பட்டது. திரும்ப திருச்சி செல்வதற்கு திட்டமிட்டபடி காரில் சென்றாா்.
மேடையில் பாஜக புதுக்கோட்டை மேற்கு மாவட்டத் தலைவா் என். ராமச்சந்திரனை, அமித் ஷாவிடம் முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை அறிமுகப்படுத்தி வைத்தாா்.
அப்போது ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்ததாகக் கூறி அவரின் தோளை அமித்ஷா தட்டி பாராட்டினாா். இதனால் நெகிழ்ச்சியடைந்த மாவட்டத் தலைவா் ராமச்சந்திரன் கண்கலங்கி, அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்தாா்.