முகப்பு
தஞ்சாவூர்

குடிநீர் கோரி ஆட்சியரகத்தில் கிராம மக்கள் முறையீடு

குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை முறையிட்டனர்.

Updated On : 15 மே, 2018 at 4:09 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை முறையிட்டனர்.
ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தஞ்சாவூர் அருகேயுள்ள கொ. வல்லுண்டாம்பட்டு கிராம மக்கள் அளித்த மனு:
கொ. வல்லுண்டாம்பட்டு கிராமத்தில் சுமார் 500 கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்துக்கு ஓராண்டாகக் குடிநீர் வரவில்லை. இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு பழுது பார்க்கப்போவதாகக் கூறி குழாய்களைக் கழற்றிச் சென்றனர்.
ஆனால், மீண்டும் குழாய்களைப் பொருத்தவில்லை. இதனால், ஒரு கி.மீ. நடந்து சென்று குடிநீர் பிடித்து வரும் நிலையில் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, விரைந்து சீரமைக்க வேண்டும்.
கிராம சேவை மையம்: திருவோணம் அருகேயுள்ள பின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் நெடுஞ்செழியன், வீ. அகிலன் உள்ளிட்டோர் அளித்த மனு: பின்னையூர் கிராமத்தில் கிராம சேவை மையம் கட்டுவதற்காக அடித்தளம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. மற்ற கிராமங்களில் இம்மையம் 15 மீட்டர் நீளத்திலும், 7.9 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்படுகிறது.
ஆனால், பின்னையூர் கிராமத்தில் 8.75 மீட்டர் நீளத்திலும், 4.78 மீட்டர் அகலத்திலும் மேல் தளத்துடன் கூடிய கட்டுமானம் கட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்துடன் மட்டும் போதிய அளவுக்குக் கட்டடம் கட்டுவதற்குப் போதுமான இட வசதி உள்ளது. முதல் தள கட்டுமானம் தேவையற்றது. கிராமத்தில் உள்ள வயதானவர்கள் ஏறிச் செல்வது மிகவும் கடினம். எனவே, இதர கிராமங்களைப் போல தரைதளம் மட்டும் உரிய நீள, அகலத்துடன் கூடிய கட்டடம் கட்டுமாறு ஆணைப் பிறப்பிக்க வேண்டும்.
தாழ்வாகத் தொங்கும்
மின் கம்பி
அன்னப்பன்பேட்டை எம். செல்வராஜ் அளித்த மனு: பொந்தியாகுளம் என்ற கிராமத்தில் உள்ள எனது வயலில் நடப்பட்ட மின் கம்பம் சேதமடைந்து, கம்பி மிகவும் தாழ்வாகத் தொங்குகிறது. அறுவடை இயந்திரம், உழவு இயந்திரம் சென்றால் விபத்து நிகழ்ந்து உயிர் சேதம் ஏற்படும். எனவே, உயிர் சேதம் ஏற்படும் முன்பு மின் கம்பத்தை மாற்றித்தர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.