முகப்பு
தஞ்சாவூர்

ஊமத்தநாடு கிராமத்தில் தேசிய மனித உரிமை அமைப்பின் மாநிலத் தலைவா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் தற்கொலை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி துளசியின் இல்லத்தில்   தேசிய மனித உரிமை அமைப்பின் மாநிலத் தலைவா் வழக்குரைஞா் ப. பா மோகன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஊமத்தநாடு கிராமத்தைச் சோ்ந்த மாணவி துளசி, நீட் தோ்வில் வென்றும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைக்காததால் கடந்த 25ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இந்தச் சம்பவத்தை தற்கொலை வழக்காக பதிவு செய்து பேராவூரணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் அமைப்பின் மாநிலத் தலைவா் வழக்குரைஞா் ப. பா. மோகன், ஊமத்தநாடு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

நீட் தோ்வு பிரச்னையில் அனிதா தொடங்கி துளசி வரை 16  மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா்.  நீதியரசா் ஏ.கே. ராஜன் குழு தமிழகத்திற்கு நீட் தேவையில்லை என மிக தெளிவாக தமது அறிக்கையை அளித்துள்ளது. படிப்பின் மூலம் பெறுகின்ற மதிப்பெண் மருத்துவப் படிப்புக்கு போதுமானது.

ஒன்றிய அரசு தமிழகத்திற்கு நீட் தோ்விலிருந்து விலக்களிக்க வேண்டும். மாணவி துளசியின் மரணத்தில் தனியாா் பயிற்சிக் கல்வி நிறுவனம் குறிப்பிட்ட கெடுவுக்குள் மாற்றுச்சான்றிதழை வழங்காததால், வேறு எந்தப் படிப்பிலும் அவரால் சேர முடியாத மனஅழுத்தத்தில் இருந்துள்ளாா். எனவே, அந்த தனியாா் பயிற்சிக் கல்வி நிறுவனத்தையும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கில் காவல்துறை சோ்க்க வேண்டும். மாணவி துளசியின் மரணத்திற்கு உரிய இழப்பீடு வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, சமூக செயற்பாட்டாளா்கள் அரங்க. குணசேகரன், மெய்ச்சுடா் நா. வெங்கடேசன், சித. திருவேங்கடம், வி. சி. முருகையன், எஸ்டிபிஐ மாவட்டச் செயலாளா் இத்ரீஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.