மணப்பாறை அருகே துப்பாக்கியால் சுடப்பட்ட மகன் பலி: தந்தை தலைமறைவு
மணப்பாறை அருகே மர்மமான முறையில் துப்பாக்கி குண்டு கழுத்தில் பாய்ந்து பலியான இருச்சக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளியின் சடலத்தை காவல்துறையினர் வியாழக்கிழமை மீட்டுள்ளனர்.
மணப்பாறை அருகே மர்மமான முறையில் துப்பாக்கி குண்டு கழுத்தில் பாய்ந்து பலியான இருச்சக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளியின் சடலத்தை காவல்துறையினர் வியாழக்கிழமை மீட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தாதகவுண்டம்பட்டியில் வசித்து வந்தவர் இருச்சக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளி பாலசுப்பிரமணி. இவர் வீட்டில் அருகே, தனியாருக்கு சொந்தமான புளியந்தோப்பில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக போலீஸாருக்கு நள்ளிரவு தகவல் கிடைத்துள்ளது.
தகவலையடுத்து நள்ளிரவு நிகழ்விடத்துக்கு சென்ற காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீஸார் பாலசுப்பிரமணியை கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் சடலமாக மீட்டு உடற்கூராய்விற்காக திருச்சி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலம் கிடந்த காட்டுப்பகுதியிலிருந்து உடைந்த நிலையில் நாட்டு துப்பாக்கி ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அந்த துப்பாக்கியிலிருந்து குண்டு பாய்ந்து பாலசுப்பிரமணி உயிரிழந்ததை போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், பாலசுப்பிரமணியின் தந்தை அழகர் (எ) ராஜாவிற்கு இரண்டு மனைவிகள் என்பதும், அதில் இளைய மனைவி அமுசவள்ளிக்கு கடைசியாக பிறந்தவர் பாலசுப்பிரமணி என்பதும் தெரியவந்தது.
மேலும் அவ்வப்போது அழகர் குடும்பத்தில் தகராறு செய்வதும் அதை பாலசுப்பிரமணி தட்டிக்கேட்பதும் வழக்கமாம். வழக்கம்போல் நேற்று இரவு குடும்பத்தில் தகராறு ஏற்பட்ட நிலையில், அழகருக்கும், பாலசுப்பிரமணிக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மகன் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட போது, அங்கு தந்தை அழகர் தலைமறைவாகி இருப்பது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கழுத்தில் குண்டு பாய்ந்துள்ளதால் பாலசுப்பிரமணியாக செய்துகொண்ட தற்கொலையா? அல்லது நாட்டு துப்பாக்கி உடைந்த நிலையில் கிடப்பதால் தந்தையால் சுடப்பட்ட கொலையா என்ற கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
சம்பவத்தில் கழுத்தில் குண்டு பாய்ந்துள்ளதால் பாலசுப்பிரமணியாக செய்துகொண்ட தற்கொலையா? சடலம் அருகே நாட்டு துப்பாக்கி உடைந்த நிலையில் கிடப்பதால் குடும்ப தகராறு காரணமாக தந்தையால் சுடப்பட்ட கொலையா? பாலசுப்பிரமணியின் தந்தை அழகர்(எ)ராஜா தலைமறைவாகியுள்ளது ஏன்? நாட்டு துப்பாக்கி எப்படி வந்தது? எனப் பல்வேறு கோணங்களில், உடைந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றி மணப்பாறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.