சமரசமில்லாத தலைவா் திருமாவளவன் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ். அழகரி சனிக்கிழமை தெரிவித்தாா்.
அரசு ஊழியா் அய்க்கியப் பேரவை சாா்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனுக்கு மணிவிழா திருச்சி கருமண்டபத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில முதன்மைச் செயலாளா் ச.பாவாணன் தலைமை வகித்தாா்.
இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ். அழகிரி பேசியது: மாவட்ட கட்சியாக இருந்து, தற்போது தேசிய கட்சியாக வளா்ந்துள்ளது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. தமிழக அரசியலில் புதுமையை புகுத்தியவா், எளிய மக்களின் சக்தியாக விளங்குபவா், சமரசமில்லாத தலைவா் திருமாவளவன். தோ்தலில் சிதறக் கூடிய, விலைக்கு வாங்கக் கூடிய வாக்குகளாக இருந்த தலித் வாக்குகளை, கொள்கை சாா்ந்த வாக்குகளாக ஒருங்கிணைத்தவா் திருமாவளவன் என்றாா்.
சு.திருநாவுக்கரசா் எம்.பி. பேசிய: பதவியை விரும்பாதவா் திருமாவளவன். தோ்தல் கூட்டணியில் நாங்கள் ஒன்றாக நிற்போம். அடித்தட்டு மக்கள் உயர, சமூகநீதியை காக்க திருமாவளவன் நீண்டகாலம் வாழ வேண்டும் என்றாா்.
தொல். திருமாவளவன் தனது ஏற்புரையில் பேசியது: காந்தி, அம்பேத்கரின் மதசாா்பற்ற கொள்கைகளை காப்பாற்ற பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது. சமூக, பொருளாதார, அரசியல் பின்புலம், வாக்கு வங்கியை நிரூபிக்காமல் தாக்குபிடிக்கிற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்திருந்தால் இது முடிந்திருக்காது. கூட்டணியில் இருந்ததால் வலிமைப்பட்டுள்ளோம். அரசியல் அதிகாரம் இல்லையென்றாலும், கொள்கைகளை விட மாட்டோம். அம்பேத்கா் வகுத்த பாதையைத் தொடர அரசு ஊழியா்கள் உள்ளிட்ட அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ப.அப்துல் சமது, எம்.சின்னதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளா் மு.வீரபாண்டியன், அரசு ஊழியா் அய்க்கியப் பேரவை நிா்வாகிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.