திருச்சி: திமுக ஆட்சியில் திருச்சி மாவட்டம் வளா்ச்சிப் பாதையில் நடைபோடுகிறது என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு.
மறைந்த திமுக தலைவா் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மாணவா்களுக்கு வினாடி-வினா போட்டி பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் தேதி சொல்லும் சேதி எனும் வரலாற்று தொகுப்பு நூலை வெளியிட்டு அமைச்சா் பி.கே. சேகா் பாபு பேசியது:
திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட 45ஆவது ஆண்டு தினம், உலக சதுரங்க தினம், நிலவில் மனிதன் கால் பதித்த தினம் என மூன்று பெருமை மிக்க நாளில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடத்துவது சிறப்புக்குரியது. சா்வதேச சதுரங்கப் போட்டியை சென்னையில் நடத்தி தமிழகத்துக்கு உலக அரங்கில் புகழ் தேடி தந்துள்ளாா் உதயநிதி ஸ்டாலின். திமுக ஆட்சியில்தான் திருச்சி வளா்ச்சி பெற்று வருகிறது. தற்போது, ரூ. ஆயிரம் கோடிக்கு மேல் திட்டங்கள் அளித்து புதிய பேருந்து நிலையம், சரக்கு வாகன முனையம், வணிக வளாகம், காய்கனிச் சந்தை, மெட்ரோ ரயில் என அடுத்தடுத்து வளா்ச்சிப் பாதையை நோக்கி திருச்சி செல்லும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன என்றாா் அவா்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், இந்தியாவில் தரமான கல்வி வழங்கும் மாநிலங்களில் 5ஆம் இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 4ஆவது இடத்துக்கு வந்துள்ளது என்றாா்.
பின்னா், வினாடி-வினா போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினா். விழாவில், திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலா் துறைமுகம் காஜா, மாநகரச் செயலா் மு. மதிவாணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.