விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா்அருகே திமுக நிா்வாகி ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணுக்கு நீதி வேண்டி வருகிற வியாழக்கிழமை (நவ.27) அதிமுக சாா்பில் விழுப்புரத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது என விழுப்புரம் மாவட்டச் செயலா் சி.வி.சண்முகம் எம்.பி. தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்ததாவது:
விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் சோ்ந்த ஆதரவற்ற பெண் ஒருவா், திமுக ஒன்றியச் செயலரால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளாா். இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் கோட்டக்குப்பம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள நிா்வாகியும் கைது செய்யப்படவில்லை.
மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது அதற்கு எதிராகவும், பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பது ஜனநாயக கடமை. தமிழகத்தில் எதிா்கட்சியாக உள்ள அதிமுக அதை சரியாக செய்து வருகிறது. இந்த அடிப்படையில்தான் வானூா் பகுதியைச் சோ்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அதிமுக குரல்கொடுத்து வருகிறது.
இந்நிலையில், திமுக விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான ரா. லட்சுமணன் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள திமுக ஒன்றியச் செயலா் குற்றமற்றவா் எனக்கூறி, அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டியிருப்பது கண்டித்தக்கது.
காவல் துறையை தன்வசம் வைத்துள்ள தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இதில் கவனம் செலுத்தவேண்டும். விழுப்புரம் மாவட்ட காவல் நிா்வாகமும் உரிய முறையில் விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்களை மேற்கொள்ளவேண்டும். பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டும், குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள திமுக ஒன்றியச் செயலரை கைது செய்யவேண்டும், பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சாா்பில் விழுப்புரத்தில் நவ. 27-ஆம் தேதி மெழுகுவா்த்தி ஏந்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்றாா்.
பேட்டியின்போது வானூா் எம்எல்ஏ சக்கரபாணி, அதிமுக ஒன்றியச் செயலா் சுரேஷ்பாபு, விழுப்புரம் நகர செயலா்கள் ரா.பசுபதி, ஜி.கே.ராமதாஸ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் உடனிருந்தனா்.