பழுதடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
கடலூர் வில்வநகரில் பழுதடைந்த சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
கடலூர் வில்வநகரில் பழுதடைந்த சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனை எதிரே அமைந்துள்ளது வில்வநகர். நகராட்சிக்கு உள்பட்ட இந்தப் பகுதியில் ஏராளமான அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் உள்ளன. மேலும், பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கியச் சாலையாக வில்வநகர் பகவதியம்மன் கோயில் தெரு சாலை உள்ளது. சிமென்ட் கான்கிரீட்டில் அமைக்கப்பட்ட இந்தச் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம், குடிநீர் வடிகால் வாரியம் முன்புறம் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக கடந்த ஜனவரி 29 -ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் கிராவல் மண் கொட்டப்பட்டு நிரப்பப்பட்டது. அதன் வழியாக தற்போது இலகுரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இருந்த போதிலும், கனரக வாகனங்கள் சென்றால் மீண்டும் பள்ளம் உருவாகி, அதில் சிக்கிக் கொள்ளும் நிலை உள்ளது.
சாலையின் ஒரு புறத்தில் சுமார் 5 அடி அகலத்தில் பெரிய கழிவுநீர் கால்வாய் எவ்வித பாதுகாப்பின்றி செல்கிறது.
எனவே, மண் கொட்டி நிரப்பாமல் சாலையை ஆய்வு செய்து தரமாக அமைக்க வேண்டும். பாதுகாப்பில்லாத கழிவுநீர் கால்வாயில் உரிய தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என அந்தப் பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.