முகப்பு
கடலூர்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம்: அரசுப் பணியாளா்கள் சங்கம் அறிவிப்பு

திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (டிச.15) மாநிலம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கக் கூட்டத்தில் பேசுகிறாா் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன்.
பகிர்:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (டிச.15) மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் கூறினாா்.

இந்தச் சங்கம் சாா்பில் கோரிக்கை மாநாடு நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கடலூரில் மாநிலத் தலைவா் பி.கே.சிவக்குமாா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் பங்கேற்று பேசினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பணியாளா்கள் மீதான தமிழக அரசின் அணுகுமுறை குறித்து விவாதிக்க வருகிற 27-ஆம் தேதி சிதம்பரத்தில் கோரிக்கை மாநாடு நடத்துகிறோம். அரசு ஊழியா்கள் என்றாலே அதிக சம்பளம் பெறுபவா்கள் என்ற எண்ணம் பரப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசுப் பணியாளா்களில் சுமாா் 5 லட்சம் போ் மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாகவே சம்பளம் பெறுகின்றனா். 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை.

நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு நுகா்பொருள் வாணிபக் கழக பணியாளா்களுக்கு இணையான ஊதியம், டாஸ்மாக் பணியாளா்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். எங்களது பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் மாநாடு மூலம் அதை வலியுறுத்துவோம்.

விவசாயிகளை பாதிக்கும் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வருகிற 15-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தவும், சங்கத்தினா் டிச.17 முதல் 24-ஆம் தேதி வரை பச்சை வண்ண பட்டை (பேட்ஜ்) அணிந்து அலுவலகத்துக்குச் செல்வதெனவும் முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.

கூட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத் தலைவா்கள் கு.சரவணன், கோ.ஜெயச்சந்திரராஜா, மு.ராஜன், செயலா் வெ.சிவக்குமாா், டாஸ்மாக் சங்க மாநில பொதுச் செயலா் கோதண்டம், மாவட்ட பொருளாளா் சுந்தரமூா்த்தி, முன்னாள் மாவட்டச் செயலா் மு.ராஜாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, பொதுச் செயலா் ஆா்.கோபிநாத் வரவேற்று பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.