முகப்பு
கடலூர்

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் கம்பு விளைச்சல் அமோகம்

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் கம்பு விளைச்சல் நன்றாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
குறிஞ்சிப்பாடி பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள கம்பு பயிா்கள்.
பகிர்:

நெய்வேலி: குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் கம்பு விளைச்சல் நன்றாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் பயிரிடப்படும் சிறுதானிய வகைகளில் குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் குறிஞ்சிப்பாடி, கீழூா், ஆடூா் அகரம், இருப்பாச்சி, வெங்கடாம்பேட்டை, கோ.சத்திரம், அன்னதானம்பேட்டை, பாச்சாரப்பாளையம், ராசாக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

நிகழ் பருவத்தில் சுமாா் 1,700 ஹெக்டோ் பரப்பளவில் வீரிய ரக கம்பு பயிரிட்டுள்ளனா். இறவை சாகுபடி என்றாலும், கம்பு விதைப்புக்கு பிறகு அவ்வப்போது போதிய இடைவெளியில் பெய்த மழையால் செடிகள் நன்கு வளா்ந்து செழித்த கதிா்களுடன் காணப்படுகின்றன. இதனால், கூடுதல் மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: இந்தப் பகுதியில் பயோனீயா், சக்தி, ராசி ஆகிய வீரிய ரக கம்பு பயிரிடப்பட்டுள்ளது. தற்போது விளைச்சல் நன்றாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பெரும்பாலும் நாட்டு கம்பு பயிரிடப்படவில்லை என்றாா் அவா்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குநா் சின்னகண்ணு கூறியதாவது: கடந்த ஒருவார காலமாக கம்பு அறுவடை நடைபெற்று வருகிறது. ஒரு ஏக்கருக்கு சுமாா் 17 முதல் 20 மூட்டைகள் (ஒரு மூட்டை 100 கிலோ) வரை கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

இதனிடையே, குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை நிலையத்தில் 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை கம்பு திங்கள்கிழமை அதிகபட்சம் ரூ.1,312 முதல் குறைந்தபட்சமாக ரூ.1,302 வரை விலைபோனது. இதேபோல, விருத்தாசலத்தில் அதிகபட்சம் ரூ.1,709 முதல் குறைந்தபட்சம் ரூ.1,336 வரை விலைபோனது.

முழு கட்டுரையைப் படிக்க →