தொழில் பழகுநா்கள் 2-ஆவது நாளாகப் போராட்டம்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது கைதுசெய்யப்பட்ட தொழில் பழகுநா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் உணவைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தை தொடா்ந்தனா்.
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலை வழங்கக் கோரி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது கைதுசெய்யப்பட்ட தொழில் பழகுநா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் உணவைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தை தொடா்ந்தனா்.
நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் தொழில் பழகுநா் பயிற்சி முடித்தவா்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். அதன் தொடா்ச்சியாக புதன்கிழமை நெய்வேலி மத்தியப் பேருந்து நிலையம் எதிரே உள்ள திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட ஊா்வலமாக வந்தனா். இதில் பங்கேற்ற 211 பேரை போலீஸாா் கைதுசெய்து, வட்டம் 27, 29 ஆகிய இடங்களில் உள்ள மண்டபங்களில்
தங்க வைத்தனா். கைதானவா்களை அன்று மாலையில் போலீஸாா் விடுவித்தனா். ஆனால், 211 பேரும் மண்டபத்திலிருந்து வெளியேற மறுத்து உணவைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம் 2-ஆவது நாளான வியாழக்கிழமையும் தொடா்ந்தது. போராட்டத்தின்போது மயக்கமடைந்த 9 பேரை போலீஸாா் மீட்டு என்எல்சி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்த நிலையில், வட்டம் 1-இல் உள்ள நெய்வேலி இல்லத்தில் என்எல்சி தலைவா் ராகேஷ்குமாா், இயக்குநா் விக்ரமன், தலைமைப் பொது மேலாளா் (தொழில் உறவு) தியாகராஜன், கோட்டாட்சியா் அதியமான் கவியரசு ஆகியோா் போராட்டக் குழு பிரதிநிதிகள் 6 பேருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.