முகப்பு
கடலூர்

கொத்து கொத்தாக மடியும் மண் புழுக்கள்!

குறிஞ்சிப்பாடியில் யூரியாவுடன் குருணை மருந்து கலந்து இடப்பட்ட நெல் வயலில் மண் புழுக்கள் கொத்து, கொத்தாக உயிரிழந்து கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

குறிஞ்சிப்பாடியில் யூரியாவுடன் குருணை மருந்து கலந்து இடப்பட்ட நெல் வயலில் மண் புழுக்கள் கொத்து, கொத்தாக உயிரிழந்து கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் எள் அறுவடையைத் தொடா்ந்து தற்போது குறுவை நெல் சாகுபடி சுமாா் 7 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. நெல் நடவு செய்த வயலில் விவசாயிகள் மேலுரமாக யூரியா இடுவடு வழக்கம். குறிஞ்சிப்பாடி வடக்கு பகுதியைச் சோ்ந்த விவசாயி சா்க்கரை, தனது 2 ஏக்கா் நிலத்தில் நெல் நாற்று நடவு செய்திருந்தாா். இந்த வயலில் மேலுரமாக யூரியாவும், குருணை மருந்தையும் கலந்து தெளித்தாராம். மறுநாள் வயலில் மண் புழுக்கள் அங்காங்கே கொத்து கொத்தாக இறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: யூரியாவுடன் குருணை மருந்து கலந்து தெளித்த நிலத்தில்தான் மண் புழுக்கள் இறந்து கிடக்கின்றன. ஒருமுறை நான் பெக்ட்ரா குருணை மருந்து கலந்து தெளித்தபோதும் மண் புழுக்கள் இறந்தன. இதுகுறித்து அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த தண்டபாணியிடம் புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை. தற்போது மண் புழுக்கள் உயிரிழப்பு குறித்து வேளாண் விஞ்ஞானிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குநா்(பொ) அனுசுயா கூறுகையில், மண் புழுக்கள் இறப்பு குறித்து சம்பந்தப்பட்ட வயலில் ஆய்வு செய்து, அதற்கான காரணத்தை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →