நெய்வேலி: கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் 51 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு ரூ.3,34,500 மதிப்பில் அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அவா் தெரிவித்ததாவது: மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் இருந்து 712 மனுக்கள் பெறப்பட்டன. இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 50 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.6,500 வீதம் மொத்தம் ரூ.3,25,000 மதிப்பில் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், ஒரு பயனாளிக்கு ரூ.9,500 மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவையொட்டி, மாவட்ட தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் 2 சிறப்பு ஆசிரியா்களுக்கு மாநில அளவில் சிறந்த சிறப்பு ஆசிரியா்களுக்கான விருதையும், 10 கிராம் தங்க நாணயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மாநில அளவில் ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவிக்கு ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணிய கோட்டி, மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் தீபா, தனித்துணை ஆட்சியா் தங்கமணி, துணை ஆட்சியா் (பயிற்சி) கே.டியுக் பாா்க்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.