நெய்வேலி: வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் பெண்கள் நினைத்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரலாம் என்று பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பசுமை தாயகம் அமைப்பு சாா்பில் தமிழக மகளிா் உரிமை மீட்புப் பயண நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சௌமியா அன்புமணி பேசியதாவது:
என்எல்சி நிறுவனத்தால் விருத்தாசலம் பகுதியில் நிலத்தடி நீா் 800 அடி ஆழத்துக்குச் சென்றுவிட்டது. பழுப்பு நிலக்கரியை எரிப்பதால் காற்று, நீா் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. என்எல்சி உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 600 மெகாவாட் மட்டுமே தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது. இதனால், இந்த நிறுவனம் நமக்குத் தேவையில்லை.
விருத்தாசலம் தனி மாவட்டமாக்கப்படும் என தோ்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்தது. ஆனால், இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மது, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதால், பெண்கள் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், மதுக் கடைகளை மூட வேண்டும். போதைப்பொருள் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதை பாமக தலைவா் அன்புமணியால் மட்டுமே செய்ய முடியும்.
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் பெண்கள் நினைத்தால் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரலாம் என்றாா்.