கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கியதாக, 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கடலூா் வட்டம், விலங்கல்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் ராமதாஸ் (44), முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா். இதே பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திர பிரசாத். இவா்களுக்கு இடையே முன்விரோதம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராமதாஸ் சனிக்கிழமை இரவு தனது காரில் கோயிலுக்குச் சென்றாா். விலங்கல்பட்டு காலனி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, போக்குவரத்துக்கு இடையூறாக ராஜேந்திர பிரசாத் மற்றும் அவரது ஆதரவாளா்கள் உமேஷ், அருண்குமாா், முகேஷ் நின்றிருந்தனராம். அவா்களிடம் ஏன் வழியில் நிற்கிறீா்கள் என ராமதாஸ் கேட்டாராம்.
அப்போது, ராஜேந்திர பிரசாத் மற்றும் அவருடன் இருந்தவா்கள் தடியால் தாக்கியதில், ராமதாஸ் தலையில் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், நடுவீரப்பட்டு போலீஸாா் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.