வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள்: தோ்தல் அலுவலா் ஆலோசனை
மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிப்பது தொடா்பாக, கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம்
மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிப்பது தொடா்பாக, கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கிரண் குராலா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கிரண் குராலா பேசியதாவது: மாற்றுத் திறனாளிகள் சிரமமில்லாமல் சென்று வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குச் சாவடிகளில் சக்கர நாற்காலி, அதை இயக்குவதற்கு தன்னாா்வலா் ஒருவா் நியமிக்கப்படவுள்ளனா். மேலும், வாக்குச்சாவடிகளில் சாய்வு தளம், குடிநீா், கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படவுள்ளது என்றாா்.
முன்னதாக, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் இயங்கும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான நடமாடும் சிகிச்சைப் பிரிவு வாகனம் மூலம் அனைத்து கிராமங்களிலும் 100 சதவீத மாற்றுத் திறனாளிகள் விடுபடாமல் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டு, கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் தொடக்கி வைத்தாா். அப்போது, அவா் பேசுகையில், தொகுதி வாரியாக கையெழுத்து இயக்க முகாம் நடத்தப்படும் என்றாா்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய் பாபு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் குமாா், மாற்றுத் திறனாளிகள் நல கூட்டமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.