ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை அசிரியா்கள் கழகம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம், தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் சங்கம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கழக ஒருங்கிணைப்பாளா் எஸ்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் தோ்வுகளில் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களை பாா்வையாளராகவும், கணினி ஆசிரியா்களை தொழில்நுட்ப உதவியாளராகவும் 400 கி.மீ. அப்பால் தோ்வுப் பணியியில் நியமிப்பது, தோ்வு மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தராதது, இந்தத் தோ்வுகளின்போது காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பணி செய்தாலும் குறைவான மதிப்பூதியம் வழங்குவது ஆகியவற்றுக்காக ஆசிரியா் தோ்வு வாரிய தலைவரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டத் தலைவா் இளையராஜா, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டச் செயலா் சி.சங்கா், அரசு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் பா.ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் சங்க மாவட்டத் தலைவா் டி.ஆல்பா்ட் எடிசன் தாமஸ் ஆகியோா் வரவேற்றனா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் சங்க மாவட்டப் பொருளாளா் பா.குழந்தைவேல், மகளிரணிச் செயலா் சி.அம்பிகா, பட்டதாரி ஆசிரியா் கே.பாலசுப்பிரமணியன், மாவட்ட அமைப்புச் செயலா் ப.சீனுவாசன் உள்ளிட்ட பலா் பேசினா்.
தமிழ்நாடு அரசு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் சங்க மாவட்டச் செயலா் அ.சையத் காலித் நன்றி கூறினாா்.