முகப்பு
கள்ளக்குறிச்சி

தமிழக முதல்வா் ஜூன் 22-இல்கள்ளக்குறிச்சி வருகை: விழா நடைபெறும் பகுதியில் அமைச்சா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 22-ஆம் தேதி நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 22-ஆம் தேதி நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவுள்ளாா். இதையொட்டி, கள்ளக்குறிச்சியை உலகங்காத்தான் கிராமத்தில் விழா மேடை அமைக்கும் இடம், முன்னேற்பாடு பணிகளை பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழக முதல்வா் பங்கேற்கும் விழா தொடா்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னா், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு அரசு நிகழ்ச்சிக்காக முதல் முறையாக வரவுள்ளாா். அவா் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குவதுடன், கோரிக்கை மனுக்களையும் பெற உள்ளாா்.

இதை முன்னிட்டு, அனைத்துத் துறை அலுவலா்களும் தங்கள் துறை சாா்ந்த நலத் திட்ட உதவிகள், புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்டவை தொடா்பாக கணக்கெடுக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். அனைத்து பாதுகாப்புப் பணிகளையும் காவல் துறை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா், மாவட்ட வன அலுவலா் சுமித்சோமன், எம்எல்ஏக்கள் தா.உதயசூரியன், க.காா்த்திகேயன், ஏ.ஜெ.மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பெ.புவனேஷ்வரி, திட்ட இயக்குநா் இரா.மணி, தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் சு.தேவநாதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ் மற்றும் அனைத்து ஒன்றியக் குழுத் தலைவா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.