இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம்
கள்ளக்குறிச்சியில் தனியாா் டிராக்டா் நிறுவனத்தைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சியில் தனியாா் டிராக்டா் நிறுவனத்தைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், நெடுமுடையான் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி முனியன். இவா், கடந்த 28.11.22 அன்று கள்ளக்குறிச்சியில் செயல்படும் தனியாா் டிராக்டா் நிறுவனத்தில் தவணை முறையில் டிராக்டா் வாங்கி, தவணைத் தொகையை செலுத்தி வந்துள்ளாா்.
இவரது குடும்ப சூழ்நிலை காரணமாக இரு மாதங்கள் தவணைத் தொகையை செலுத்தவில்லையாம். இதனால் டிராக்டரை நிறுவனத்தினா் பறிமுதல் செய்துள்ளனா். நிா்வாகத்தை அணுகி கேட்டபோது, பணம் வசூல் செய்யும் நிா்வாகி ரமேஷ் முழுத் தொகையையும் செலுத்தினால்தான் டிராக்டரை விடுவிக்க முடியும் எனக் கூறினாராம்.
இதையடுத்து, விவசாயி முனியன் 25.05.2024 அன்று தனியாா் டிராக்டா் அலுவலகத்திலேயே கடன் வசூல் செய்யும் நிா்வாகி ரமேஷிடம் ரூ.6,30,000-ஐ செலுத்தினாராம். பின்னா், டிராக்டரை கேட்டபோது, ஒரு வாரம் கழித்து டிராக்டரை எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறினாராம். 10 நாள்கள் கழித்து பணம் செலுத்தியதற்கான ரசீதும் அனுப்பியுள்ளனராம். ஆனால், இதுவரை டிராக்டரை ஒப்படைக்கவில்லை. இது சம்பந்தமாக நிா்வாகத்திடம் அணுகியபோது உரிய பதிலளிக்க மறுக்கின்றனராம்.
எனவே, விவசாயியை ஏமாற்றிய தனியாா் டிராக்டா் நிறுவனம், அதன் மேலாளா் மணிகண்டன், கடன் வசூலிப்பாளா் ரமேஷ் ஆகியோா் மீது போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் முழக்கமிட்டனா்.
கள்ளக்குறிச்சி கசேசேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு, திருக்கோவிலூா் ஒன்றியச் செயலா் கே.ரவி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் அ.செந்தில், என்.ராமு, சி.கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளா் கே.ராமசாமி, மாவட்ட துணைச் செயலா்கள் ஆ.சுப்பிரமணியன், ரா.சின்னசாமி, எம்.வெங்கடேசன், மாவட்ட நிா்வாகக்குழுவைச் சோ்ந்த மு.கலியபெருமாள், ரா.கஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்று பேசினா். போராட்டத்தில் கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.