புதுச்சேரி, செப். 17: ""நவீனத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றியும், அவர்களது படைப்புகள் பற்றியும் உலக அளவில் அறியப்பட ஆவன செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது'' என்று "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் கூறினார்.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் 89-ம் பிறந்தநாள் விழாவையொட்டி "மணல் வீடு' சிற்றிதழின் ஆசிரியர் மு. அரிகிருஷ்ணனுக்கு "கரிசல் கட்டளை விருது' வழங்கி அவர் பேசினார்.
காமன்வெல்த் எழுத்தாளர்கள் மாநாட்டில் நம்முடைய தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய முறையான அறிமுகமோ, புரிந்துணர்வோ காணப்படவில்லை என்று கவிஞர் வெண்ணிலா குறிப்பிட்டதை வழிமொழிந்து அவர் பேசினார்.
""தமிழ் எழுத்தாளர்களுக்கு உலக அரங்கில் கெüரவம் கிடைக்கவில்லை, அங்கீகாரம் இல்லை என்கிற நிலைமை நிச்சயம் இருக்கிறது. பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று பாடிய பாரதியார், தமிழ்ப் படைப்புகளைப் பிற மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று சொல்லாமல் விட்டுவிட்டார். நல்ல தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் முறையாகப் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்படவில்லை.
பாரதியார் உள்ளிட்ட தமிழ்ப் படைப்பாளிகள் பற்றிய முறையான புரிந்துணர்வு உலக இலக்கிய உலகில் இல்லாமல் இருப்பது தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சாபக்கேடு. அதற்குச் சிறப்பான மொழிபெயர்ப்புகளும், முறையான மொழிபெயர்ப்பு அமைப்புகளும் இல்லாமல் இருப்பது ஒரு முக்கிய காரணம். பிறமொழிப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க நம்மவர்கள் காட்டும் ஆர்வத்தைத் தமிழ்ப் படைப்புகளை வேற்று மொழிகளில் பெயர்ப்பதில் முனைப்புக் காட்டுவதில்லை என்பதுதான் அதற்குக் காரணம்.
மலையாள எழுத்தாளர்களின் படைப்புகள் உலக அளவில் போய்ச் சேரும் வகையில் அவர்கள் மொழி பெயர்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். அதனால் அந்த எழுத்தாளர்கள் உலக அளவில் பேசப்படுகின்றனர். இதற்குக் கேரள அரசும், கேரளத்துக்கு வெளியே இருக்கும் இலக்கிய அமைப்புகளும், ஆர்வலர்களும் உறுதுணையாக இருக்கின்றன. ஏனைய இந்திய மொழிப் படைப்புகள் இதேபோல ஊக்கம் பெறுகின்றன. ஆனால், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை மொழி பெயர்க்கவோ, அந்த எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்தவோ தமிழர்களும், அரசும் முயற்சியும் எடுக்கவில்லை. இதற்காக முறையான அமைப்பையும் உருவாக்கவில்லை.
தமிழ் இலக்கியப் படைப்புகளும், படைப்பாளிகளும் உலக அளவில் பேசப்படச் செய்வது பற்றி உடனடியாக நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
கி.ராஜநாராயணனின் பெயரை கி.ரா. என்று ரத்தினச் சுருக்கமாகக் கூறுகிறோம். அவருடைய எழுத்துகளில் தமிழ் மண்ணின் மணம் இருக்கும். நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை முறை படம் பிடித்தது போல வெளிப்பட்டிருக்கும். 20-ம் நூற்றாண்டுத் தமிழகத்தின் சொல் வழக்கு எப்படி இருந்தது என்பதற்கான பதிவு கி.ரா.வின் படைப்புகள். ராஜநாராயணன் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவது வித்தியாசமானதாக இருக்கிறது. தனது பிறந்த நாள் அன்று ஆண்டுதோறும் ஒரு சிற்றிதழைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கிப் பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதற்குக் காரணம், நல்ல இலக்கியப் படைப்புகள் சிற்றிதழ்கள் மூலம்தான் வெளிக்கொணரப்படுகின்றன. தமிழ் இலக்கியத்தின் ஊற்றுக்கண் சிற்றிதழ்கள்தான். அதனால், கி.ரா.வின் பிறந்தநாள் விழா தமிழுக்கான விழாவாக இருக்கிறது'' என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.