மணலை இறக்குமதி செய்ய ஏஐடியூசி கோரிக்கை
வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்ய புதுவை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில கட்டடக்கலைத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்ய புதுவை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில கட்டடக்கலைத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம், முதலியார்பேட்டை ஏஐடியூசி தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்க மாநிலத் தலைவர் விசுவநாதன் தலைமை வகித்தார். சங்கத்தில் நடைபெற்ற வேலைகள் சம்பந்தமாக பொதுச்செயலாளர் சந்திரசேகரன் அறிக்கை வாசித்தார்.
ஏஐடியூசி செயல் தலைவர் நாரா.கலைநாதன், அகில இந்திய ஏஐடியூசி பொதுக்குழு முடிவுகளை விளக்கி பேசினார். ஏஐடியூசி மாநில தலைவர் அபிஷேகம் புதுச்சேரி மாநில குழுவின் எதிர்கால வேலைகள் சம்பந்தமாக எடுத்துரைத்தார். சங்க கெüரவத் தலைவர் ஜெயபாலன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலத் தலைவர் விசுவநாதன் கூறியதாவது: புதுச்சேரியில் மணல் கிடைக்காத காரணத்தால், கட்டுமானப் பணிகள் முடங்கி ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக மணல் பிரச்னையில் தலையிட்டு வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய வேண்டும்.
மணலுக்கு மாற்றாக செயற்கை மணலை (எம்-சாண்ட்) அரசே கொள்முதல் செய்து பாசிக் மூலம் விற்பனை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மணல் குவாரியை ஏலம் எடுத்து புதுச்சேரி அரசு மணல் விற்பனை செய்ய வேண்டும்.
கட்டுமானப் பணியில் உள்ள ஆண் தொழிலாளர்களுக்கு 55 வயது முடிந்தவுடனும், பெண் தொழிலாளர்களுக்கு 50 வயது முடிந்தவுடனும் மாதா மாதம் உதவி தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு பிரசவ கால நிதியாக பேறு காலத்துக்கு முன் 3 மாதம், பேறு காலத்துக்கு பிறகு 3 மாதம் என 6 மாதத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும்.
கட்டடத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்ய விண்ணப்பம் கொடுத்துள்ள தொழிலாளர்களை கால தாமதம் செய்யாமல் உடனடியாக வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற ஜன. 4-ஆம் தேதி புதுச்சேரி கூட்டுறவு கட்டட மையம் முன்னும், ஜன.5-ஆம் தேதி காலை ஆலங்குப்பத்திலும், மாலை மேட்டுப்பாளையத்திலும், ஜன.8-ஆம் தேதி இந்திராகாந்தி சிலை அருகிலும், ஜன.9-ஆம் தேதி கனகசெட்டிகுளத்திலும், ஜன.10-ஆம் தேதி அரியாங்குப்பத்திலும், ஜன.11-ஆம் தேதி கரியமாணிக்கத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.