காவிரி மீட்பு நடைபயணத்தில் மு.க.ஸ்டாலினுடன் பங்கேற்பேன்
காவிரி மீட்பு நடைபயணத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பங்கேற்பேன் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
காவிரி மீட்பு நடைபயணத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பங்கேற்பேன் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த தமிழகம், புதுவை அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதற்கிடையே, தமிழக அரசு தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்துள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக, புதுவையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி கருத்துகள் கேட்கப்பட்டன. 26.3.18 அன்று சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி செயல்படாத மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுப்பதற்கான கோப்பை ஆளுநருக்கு அனுப்பினோம். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால், மத்திய அரசை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்வதற்கு முன்பு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் எனக் கூறி, கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். எனவே, தில்லி சென்று வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் உறுதியளித்தபடி, அரசுக் கொறடா அனந்தராமன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம். இந்த மனுவின் மீதான விசாரணை திங்கள்கிழமை (ஏப்.9) நடைபெற உள்ளது.
கர்நாடகத்தில் இருந்து பெறும் காவிரி நீரில் உரிய பங்கை காரைக்காலுக்கு தமிழகம் தருவதில்லை. இந்த விஷயத்தில் இரு மாநிலங்களும் புதுவையை வஞ்சிக்கின்றன. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றாலும் எங்களுக்கு அதுபற்றிக் கவலையில்லை. புதுவை விவசாயிகளின் நலன்தான் எங்களுக்கு முக்கியம். அவர்களைக் காக்கும் கடமையும், பொறுப்பும் புதுவைக்கு அரசுக்கு உண்டு.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக திருச்சியில் இருந்து கடலூர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் வருகிற 11-ஆம் தேதி காரைக்காலுக்கு வருகிறார். அப்போது நானும், அமைச்சர் நமச்சிவாயமும், காரைக்காலைச் சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணனும் நடைபயணத்தில் பங்கேற்க உள்ளோம் என்றார் முதல்வர் நாராயணசாமி.