ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தர வலியுறுத்தல்
வீடில்லாத ஏழைகளுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தர புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
வீடில்லாத ஏழைகளுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தர புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. அந்தக் கட்சியின் காமராஜர் நகர் தொகுதியில் 3-வது மாநாடு தனியார் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளர் ஜி.விசுவநாதன் மாநாட்டு கொடி ஏற்றினார். தேசியக் குழு உறுப்பினர் நாரா. கலைநாதன் மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினார்.
துணைச் செயலாளர்கள் ராமமூர்த்தி, சலீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொகுதி செயலாளர் துரை.செல்வம், பொருளாளர் மாதவராமன், துணைச் செயலாளர்கள் தயாளன், ராமராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்: சாரம் எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அரசு உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும். சாரம் வார்டுக்கு உள்பட்ட பகுதியில் உள்ள வீடில்லா ஏழைகளுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி வீடுகள் கட்டித்தர வேண்டும்.
புதை மின்வட திட்டத்தை இப்பகுதியில் அமல்படுத்த வேண்டும். லெனின் நகர் பகுதியில் உள்ள காவல் உதவி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
வாஞ்சிநாதன் நகரில் 50 ஆண்டு காலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.