தூய்மை இந்தியா இயக்க விழிப்புணர்வுப் பேரணி
புதுச்சேரி காலாப்பட்டில் தூய்மை இந்தியா இயக்க விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி காலாப்பட்டில் தூய்மை இந்தியா இயக்க விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம், உழவர்கரை நகராட்சி, புதுச்சேரி பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இப்பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
பேரணியை தொழில்துறை அமைச்சர் ஷாஜகான் கொடியசைத்து தொடக்கிவைத்தார். புதுச்சேரி பொறியியல் கல்லூரி முதல்வர் பி.தனஞ்செயன் தலைமை வகித்தார். மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சின்ன காலாப்பட்டு குப்பம் கடற்கரை திடலுக்குச் சென்று சேர்ந்தனர். அங்கு பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி இயக்குநர் தி.சிவக்குமார் வரவேற்றார். அகில இந்திய வானொலி நிலைய உதவி இயக்குநர் க.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.
தொலைக்காட்சி நிலைய உதவி இயக்குநர் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, வானொலி நிலைய செய்திப் பிரிவு உதவி இயக்குநர்
ரெ.சிதம்பரநாதன், வேலூர் இம்ப்காப்ஸ் இயக்குநர் வைத்தியர் கே.பி.அருச்சுனன் ஆகியோர் கருத்துரையாற்றினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ஷாஜகான் பரிசு வழங்கினார்.
சின்னகாலாப்பட்டு குப்பம் ஊர்த் தலைவர் எ.அறிவழகன் வாழ்த்துரையாற்றினார். உழவர்கரை நகராட்சி நகர் நல அலுவலர்
பி.சுரேஷ் சிறப்புரையாற்றினார். அரியூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாமும் நடத்தப்பட்டது.
வேலூர் ஸ்ரீபுற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையம் சார்பில் மூலிகைக் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.
புதுச்சேரி பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகளிருக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துணிப் பைகள் வழங்கப்பட்டன.
கள விளம்பர உதவியாளர் மு.தியாகராஜன் நன்றி கூறினார்.