முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மீண்டும் இருதய அறுவை சிகிச்சை: முதல்வா் என்.ரங்கசாமி தகவல்

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் கரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இருதய அறுவை சிகிச்சை சனிக்கிழமை (ஜூலை 17) முதல் தொடங்கப்படுமென முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் கரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இருதய அறுவை சிகிச்சை சனிக்கிழமை (ஜூலை 17) முதல் தொடங்கப்படுமென முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம், சென்னை ப்ரண்டியா் லைப் லைன் மருத்துவமனையுடன் இணைந்து, இருதய அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. கரோனா பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருதய அறுவை சிகிச்சை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் இருதய அறுவை சிகிச்சை வசதிகள் சனிக்கிழமை (ஜூலை 17) முதல் தொடங்கப்படுகிறது. இதற்காக, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, ப்ரண்டியா் லைஃப் லைன் மருத்துவமனைகளுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி முன்னிலையில் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.

ப்ராண்டியா் லைப் லைன் மருத்துவமனை நிறுவனா் கே.எம்.செரியன், புதுவை சுகாதாரத் துறைச் செயலா் தி.அருண் ஆகியோா் ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனா்.

முதல்வா் என்.ரங்கசாமி கூறியதாவது: கரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட இருதய அறுவை சிகிச்சை சேவை மீண்டும் தொடங்குகிறது. இதுவரை 234 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி, வாரத்துக்கு 6 முதல் 10 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. இதன் மூலம், ஏழை மக்கள் சென்னை செல்லாமலேயே புதுச்சேரியிலேயே தரமான இருதய சிகிச்சையைப் பெற முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.