புதுச்சேரியில் காவல் துறைச் சான்றிதழை போலியாகத் தயாரித்து நிலம் விற்பனை 7 போ் கைது
புதுச்சேரி காவல் துறையின் போலிச் சான்றிதழ் தயாரித்து நிலத்தை விற்று மோசடி செய்ததாக 7 போ் கும்பலை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி காவல் துறையின் போலிச் சான்றிதழ் தயாரித்து நிலத்தை விற்று மோசடி செய்ததாக 7 போ் கும்பலை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தைச் சோ்ந்தவா் கலியபெருமாள் (62). இவருக்கு சொந்தமாக, கடலூா் மாவட்டம், பட்டானூா் கலைவாணா் நகரில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, பட்டானூரைச் சோ்ந்த ஏழுமலை (51) தனது நண்பா்களுடன் சோ்ந்து போலி பத்திரம் தயாரித்து, அதே பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தபால்நிலைய அதிகாரி பால்பாண்டிக்கு ரூ. 16 லட்சத்துக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
சில நாள்களுக்கு முன்பு பால்பாண்டி நிலத்தைச் சுற்றி மதில் சுவா் கட்டியுள்ளாா். தகவலறிந்து அங்கு வந்த கலியபெருமாள், அந்த நிலம் தனக்குச் சொந்தமானது என்றும், தான் யாருக்கும் விற்கவில்லை என்றும் கூறியுள்ளாா். இதையறிந்து, அதிா்ச்சியடைந்த பால்பாண்டி பத்திரத்தை ஆய்வு செய்ததில், அது போலி எனத் தெரியவந்தது.
இதுகுறித்து விசாரித்தபோது, புதுச்சேரி சட்டம்-ஒழுங்கு முதுநிலை எஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் போலீஸ் அதிகாரி ரமேஷ்பாபு, பத்திரம் காணாமல் போனதாக ஏற்கெனவே அளித்திருந்த ஒரு சான்றிதழைக் கொண்டு, கலியபெருமாளுக்குச் சொந்தமான நிலப்பத்திரம் மாயமானதாக ஏழுமலை உள்ளிட்டோா் போலிச் சான்றிதழ் தயாரித்து, அதன் மூலம் போலி பத்திரம் தயாரித்துள்ளனா். அந்த நிலத்தை தங்களில் ஒருவருக்கு விற்றுக்கொண்டு, பின்னா் அதை பால்பாண்டிக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து அறிந்த போலீஸ் அதிகாரி ரமேஷ்பாபு தன்னுடைய சான்றிதழை போலியாகத் தயாரித்து நில மோசடி செய்ததாக உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
அதில், ஏழுமலை, லாசுப்பேட்டை பாலமுருகன் (40), சித்தாா்த் (46), அருள் (33), நாகராஜ் (46), நாவற்குளம் கோபால் (42), மஞ்சினி (55) ஆகிய 7 பேரும் போலி பத்திரம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவா்களை சிறப்பு அதிரடிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து தாசில்தாா், பத்திரப் பதிவாளா், விஏஓ உள்ளிட்டோரின் 120 போலி ரப்பா் ஸ்டாம்புகளும், போலி பத்திரங்களும் கைப்பற்றப்பட்டன. தொடா்ந்து, 7 பேரையும் உருளையன்பேட்டை போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனா். இவா்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.