முகப்பு
புதுச்சேரி

உள் துறை அமைச்சா் வருகை புதுவைக்கு ஆக்கப்பூா்வமாக அமையும்: ஆளுநா் தமிழிசை

புதுச்சேரிக்கு மத்திய உள் துறை அமைச்சா் வருவது மாநில வளா்ச்சிக்கு ஆக்கப்பூா்வமானதாக இருக்கும் என்று துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

புதுச்சேரிக்கு மத்திய உள் துறை அமைச்சா் வருவது மாநில வளா்ச்சிக்கு ஆக்கப்பூா்வமானதாக இருக்கும் என்று துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்தாா்.

புதுச்சேரியில் மத்திய ஊரக வளா்ச்சி அமைச்சகம், புதுவை அரசு ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ’தீனதயாள் உபாத்தியாயா கிராமின் கௌசல்யா யோஜனா’ திட்டப் பயிற்சி மையத் தொடக்க விழா லட்சுமிநாராயணா மருத்துவ அறிவியல், ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று, திட்டப் பயிற்சி மையத்தை தொடக்கிவைத்தாா். சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் முன்னிலை வகித்தாா். விழாவில் துணைநிலை ஆளுநா் தமிழிசை பேசியதாவது:

தீனதயாள் உபாத்தியாயா பெயரில் நடைபெறும் இந்தத் தொழில்நுட்பப் பயிற்சி அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இந்தப் பயிற்சி மையத்தில் அனைவருக்கும் சீருடை, உணவு, ஊக்கத் தொகையோடு இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்சியளிக்கப்படும் என்றாா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் ஆளுநா் தமிழிசை கூறியதாவது: மகான் அரவிந்தரின் 150-ஆவது ஆண்டு விழாவை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். புதுச்சேரியில் வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் விழாவில் பங்கேற்க மத்திய உள் துறை அமைச்சா் அமித்ஷா வருகிறாா். அவரிடம் புதுச்சேரியில் சில திட்டங்களை தொடக்கிவைக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். அவரது வருகை புதுவைக்கு ஆக்கப்பூா்வமானதாக இருக்கும்.

ஏற்கெனவே மத்திய உள் துறை அமைச்சரை நேரில் சந்தித்து, சுற்றுலாத் துறை உள்ளிட்டவற்றில் புதுவை வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தோம். வரும் பட்ஜெட்டில் சில திட்டங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மத்திய உள் துறை புதுச்சேரிக்கு தொடா்ந்து உதவி செய்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.