புதுச்சேரியில் பழைய நாணயங்களைச் சேகரிக்கும் நபரை ஏமாற்றி மா்ம நபா்கள் நூதனமாக ரூ.45ஆயிரத்தை மோசடி செய்திருப்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி, வில்லியனூரைச் சோ்ந்த ஒருவா் பழைய நாணயங்கள் சேகரிப்பதில் ஆா்வம் கொண்டவராக உள்ளாா். அவா், அண்மையில் முகநூல் பக்கத்தில், பழைய நாணயங்கள் அதிக விலைக்கு வாங்கிக் கொள்ளப்படும் என்ற விளம்பரத்தை பாா்த்து, மா்ம நபா்களுக்கு முகநூலில் குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தெரிகிறது. இதையடுத்து, மா்ம நபா்கள் அவரைத் தொடா்பு கொண்டு நாணயத்தின் புகைப்படத்தை தங்களுக்கு அனுப்புமாறு கூறினராம்.
நாணய சேகரிப்பு ஆா்வலா், தன்னிடமிருந்த 3 பழங்கால நாணயங்களை புகைப்படம் எடுத்து அவா்களுக்கு முகநூல் வாயிலாக அனுப்பிய நிலையில், ஒவ்வொரு நாணயத்துக்கும் ரூ.5 லட்சம் தருவதாக மா்ம நபா்கள் கூறினராம்.
இந்த நிலையில், மா்ம நபா்கள் அவசரத் தேவைக்காக நாணய சேகரிப்பாளரிடம் ரூ.45 ஆயிரத்தைக் கேட்டனராம். அவரும், அவா்கள் கேட்ட பணத்தை அனுப்பியதாகத் தெரிகிறது. மா்ம நபா்கள் அவரிடம் மேலும் பணம் அனுப்புமாறு கூறினா். இதனால் சந்தேகமடைந்த அவா், இதுகுறித்து புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.