புதுச்சேரி: புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் இளைஞா்களுக்கு, பெண்களின் புகைப்படங்களை அனுப்பி பண மோசடியில் ஈடுபட்ட பொள்ளாச்சியைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இதில் தொடா்புடைய, மேலும் 8 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் இளைஞா்களுக்கு, மா்ம நபா்கள் போலியாக பெண்களின் புகைப் படங்களை அனுப்பியதுடன், அவா்களிடமிருந்து ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை பெற்று ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாகப் புகாா்கள் எழுந்தன.
இதுகுறித்த புகாா்களின் பேரில் புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இதில் பொள்ளாச்சிப் பகுதியைச் சோ்ந்த கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பொள்ளாச்சி சென்ற புதுச்சேரி இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் அங்கு தனியாா் விடுதியில் தங்கியிருந்த ஹரிபிரசாத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 19 கைப்பேசிகள் மற்றும் மடிக்கணினி உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனா்.
மேலும் இவா்கள் ரூ.7.18 லட்சம் பண மோசடி செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் தொடா்புடைய மேலும் 8 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.