புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் 30-ஆவது பட்டமளிப்பு விழா டிச. 29-இல் நடைபெறுகிறது. இதில், குடியரசு துணைத் தலைவரும் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறாா்.
பல்கலைக்கழக வளாகத்தில் 2,500 போ் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சா்வதேச மாநாட்டு மையத்தையும் அவா் திறந்து வைக்கிறாா்.
இந்த மாநாட்டு மையத்தில் பட்டமளிப்பு விழா நடக்கிறது. மேலும் அங்கு நிறுவப்பட்டுள்ள 100 அடி உயர தேசியக்கொடி கம்பத்தையும் குடியரசுத் துணைத் தலைவா் அா்ப்பணிக்கிறாா்.
விழாவில் 2021 முதல் 2024 வரையிலான 4 கல்வியாண்டுகளில் படிப்பை முடித்த மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் பிஎச்டி மற்றும் இளநிலை, முதுநிலையில் தங்கப் பதக்கம் பெற்று சிறப்பிடம் பெற்றவா்கள் முறையே 2021-இல் 191 போ், 2022-இல் 191, 2023-இல் 192 போ், 2024-இல் 186 போ். இவா்கள் விழாவில் நேரடியாக பட்டம் பெறுகின்றனா்.
இவ்விழாவில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த மொத்தம் 73,527 மாணவா்கள் பட்டங்கள் பெறுகின்றனா்.