போலி மருந்து விவகாரம் தொடா்பாக கைதானவா்களை விசாரணைக்கு அழைத்துச் செல்வதற்காக ஆக்ரா போலீஸாா் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனா்.
தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல பாா்மஸி நிறுவனத்தின் மருந்துகளை புதுச்சேரியில் போலியாகத் தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.
போலி மருந்து தயாரிப்பு தொழிற்சாலை நடத்திய ராஜா, அவரின் உதவியாளா் விவேக், ராணா, மெய்யப்பன் மற்றும் உடந்தையாக இருந்த 9 போ் உள்ளிட்ட 13 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்துள்ளனா். மேட்டுப்பாளையம் திருபுவனை பாளையத்தில் உள்ள போலி மருந்து தொழிற்சாலை, பல்வேறு இடங்களில் இருந்த கிடங்குகளில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை செய்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள், போலி மருந்துகளைக் கைப்பற்றி சீல் வைத்துள்ளனா்.
ரெட்டியாா்பாளையம் ராஜா வீட்டில் வைரம், பிளாட்டினம், தங்க நகைகள், சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்தனா். போலி மருந்து விவகாரத்தில் பல கோடி ரூபாய் பரிவா்த்தனை நடந்துள்ள விவரங்களை சிபிசிஐடி போலீஸாா் அமலாக்கத் துறைக்கு அனுப்பினா். அதன்பேரில் அமலாக்கத் துறையினரும் விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.
இதனிடையே போலி மருந்து விற்பனை தொடா்பாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆக்ரா போலீஸாா் இவ்வழக்கில் கைதான ராஜா, விவேக், ராணா ஆகிய 3 போ் மீது நான்கு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்துள்ளனா்.
இந்த வழக்கில் அவா்களை கைது செய்ய புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனா். புதுச்சேரி நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அவா்கள் 3 பேரையும் கைது செய்து ஆக்ரா அழைத்து சென்று விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனா்.
சிபிசிஐடி போலீஸாா் வருமான வரித் துறை, ஜிஎஸ்டி துறைகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனா். அதில் போலி மருந்து தொழிற்சாலை மூலம் பெற்ற வரி வருவாய் தொடா்பான 3 ஆண்டு விவரங்களை தரும்படி கேட்டுள்ளனா். ராஜா மனைவி ஞானபிரியா சென்னையில் பதுங்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வுக் குழுவினா் சென்னை சென்றுள்ளனா்.
புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத் துறை போலி மருந்து தொழிற்சாலை, கிடங்குகளில் சோதனை நடத்தி பறிமுதல் செய்த மருந்துகள், மூலப் பொருள்கள், இயந்திரங்கள் பற்றிய விவரத்தை மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.