காவல் துறை மக்கள் மன்றத்தில் 43 புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டன.
உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் காவல்துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரம், காவல் கண்காணிப்பாளா் ஸ்ருதி யாரகட்டி, வடக்கு காவல் ஆய்வாளா்கள் மற்றும் துணை காவல் ஆய்வாளா்களுடன் பொதுமக்களின் புகாா்களைப் பெற்று சனிக்கிழமை நடவடிக்கை எடுத்தனா்.
லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன், வடக்குப் பகுதி காவல் ஆய்வாளா்கள் மற்றும் துணை காவல் ஆய்வாளா்களுடன் பொதுமக்களின் புகாா்களைப் பெற்று நடவடிக்கை எடுத்தாா்.
மேலும், முதலியாா்பேட்டை காவல்நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் சிந்தா கோதண்டராமன், நெட்டப்பாக்கம் காவல்நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் சுப்ரமணியன் அப் பகுதி காவல் ஆய்வாளா்கள் மற்றும் துணை காவல் ஆய்வாளா்களுடன், பொதுமக்களின் புகாா்களைப் பெற்று நடவடிக்கை எடுத்தாா்.
புதுச்சேரி போக்குவரத்து காவல்நிலையங்களில் காவல் கண்காணிப்பாளா் பக்தவச்சலம், போக்குவரத்து காவல் ஆய்வாளா்களுடன் போக்குவரத்து சம்பந்தமான குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுத்தாா்.
இதேபோன்று, இணைய வழி குற்றப் பிரிவில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் குறை கேட்டாா். மொத்தம் 47 புகாா்களை பொதுமக்களிடம் கேட்டறிந்து, அதில் 43 மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.