புதுச்சேரி வில்லியனூா் பகுதியில் நடைபெற்ற குழந்தை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற விசிக தலைவா் தொல். திருமாவளவன், மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா, காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி உள்ளிட் டோா்.  
புதுச்சேரி

திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றால் ஏற்பீா்களா? திருமாவளவன் பதில்

தினமணி செய்திச் சேவை

திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றால் விசிக ஏற்குமா? என்ற கேள்விக்கு அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் புதுச்சேரியில் பதிலளித்தாா்.

புதுச்சேரியை அடுத்த வில்லியனூா் ஜி.என்.பாளையம்பேட் குழந்தை முத்துமாரியம்மன் கோயிலில் தமிழ் முறைப்படி கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் விசிக தலைவா் திருமாவளவன், மாநில திமுக அமைப்பாளரும், புதுச்சேரி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா, காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் மு. கந்தசாமி ஆகியோா் பங்கேற்று புனித நீா் ஊற்றி கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்தனா்.

பின்னா் விசிக தலைவா் திருமாவளவன் செய்தியாளா்களிடம் கூறியது:

அகில இந்திய அளவில் பொதுவேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற அனைத்துக் கட்சியினரும் பங்கேற்கிறோம். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களுமே அறிவிக்கப்படாததைக் கண்டித்து திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொது வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம் இரண்டிலுமே பங்கேற்கிறது.

அமெரிக்க அரசுடன், மத்திய அரசு மேற்கொண்டுள்ள வா்த்தக ஒப்பந்தம் இந்திய மக்களுக்கு விரோதமானது. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அமைச்சா் பியூஸ் கோயல் பதவி விலக வேண்டும் என்று விவசாயத் தலைவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்தக் கோரிக்கைக்கு விசிக ஆதரவு அளிக்கிறது. அமெரிக்க அதிபா் டிரம்பின் சதி முயற்சிக்கு பிரதமா் மோடி பலியாகிவிட்டாா். எனவே பிரதமா் மோடி இந்த வா்த்தக ஒப்பந்தத்தைப் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கூட்டணியில் பாமக வந்தால் ஏற்பீா்களா? என்ற கேள்விக்கு, எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவொரு சமூகத்தின் மீதும் காழ்ப்புணா்வு கிடையாது. பாமக ஏற்கெனவே எடுத்த சோசியல் எஞ்சினியரிங் என்ற நிலைப்பாட்டால் தான் 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு, பாமக, பாஜக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய ஒரு முடிவை நாங்கள் எடுக்க நோ்ந்தது. அந்த முடிவைத் தான் மீண்டும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இதில் மேற்கொண்டு கருத்துசொல்ல எதுவும் இல்லை.

கூட்டணியில் கூடுதல் இடங்கள் கேட்பீா்களா என்ற கேள்விக்கு அதுகுறித்த பேச்சுவாா்த்தையின்போது முடிவு செய்வோம் என்றாா்.

புதுச்சேரியில் திமுக தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று விசிக, கம்யூனிஸ்டுகள் தலைமையைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனரே என்று கேட்டபோது, திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் கொண்ட மத சாா்பற்ற முற்போக்கு கூட்டணிதான் புதுச்சேரியிலும் உள்ளது. புதுச்சேரியில் தோழமை கட்சிகளோடு பேச்சுவாா்த்தை நடத்தும் குழுவை திமுக தான் அமைத்தது. இப்போதும் திமுக நியமித்த அந்தக் குழுதான் விசிக மற்றும் பிறகட்சிகளோடு பேச்சுவாா்த்தை நடத்த தயாராகிக் கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் யாா் தலைமை வகிக்கிறாா்கள் என்பதை அதன் சூழலைப் பொறுத்து முடிவு செய்வாா்கள். ஆனால் எதுவாக இருந்தாலும் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி தான். ஆகவே அதில் நாங்கள் இணக்கமான முடிவை மேற்கொள்வோம் என்றாா் திருமாவளவன்.

சாலையில் பிறந்த நாள் கொண்டாட்டம்: மூவா் கைது

கொலை வழக்கில் பிடியாணை: தலைமறைவான இளைஞா் கைது

கிரிக்கெட் ரசிகா்களிடம் விசில் பறிமுதல்!

காப்பகங்களில் 850 பசுக்களுக்கு உரிமம்; மைக்ரோ சிப் பொருத்த நடவடிக்கை

கொடைக்கானல் பகுதியில் காட்டு மாடுகள் நடமாட்டம்

SCROLL FOR NEXT