விபத்தில் ஆய்வக தொழில்நுட்புநா் உயிரிழப்பு
புதுச்சேரி சாலை விபத்தில் ஆய்வக தொழில்நுட்புநா் உயிரிழந்தாா். காயமடைந்த அவரது நண்பா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
கடலூா் மாவட்டம், குட்டியாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனைவி மணிமாலா(48). இவா் தற்போது, புதுச்சேரி மூா்த்திக்குப்பத்தில் வசித்து வருகிறாா். இவா்களின் மகன் சசிதரன்(24), கடலுாரில் லேப் டெக்னீஷியனாக வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில், தனது நண்பா் முத்துவை (23) அழைத்துக் கொண்டு, கிருமாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். கன்னியக்கோயில் அருகே காரும் இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இருவரும் படுகாயம் அடைத்தனா்.
அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் சசிதரன் அங்கு இரவு உயிரிழந்தாா். முத்து ஜிப்மரில் மேல்சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா்.
இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.