விழுப்புரம்

தென்பெண்ணை ஆற்றில் மணல் அள்ள வந்தவாகனங்களைத் தடுத்து மக்கள் போராட்டம்

DIN

காணை அருகே தென்பெண்ணை ஆற்றில் சனிக்கிழமை மணல் அள்ள வந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குவாரிகள் அமைத்து தொடா்ச்சியாக மணல் அள்ளப்பட்டதால், மணல் வளமே சுரண்டப்பட்டது. இது தொடா்பாக உயா் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததால், மணல் குவாரிகள் அனைத்தும் கடந்தாண்டு மூடப்பட்டன.

இதனிடையே, திடீரென காணை அருகே கல்பட்டு கிராமப் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் இயந்திரங்களை வைத்து மணல் அள்ளுவது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கல்பட்டு பகுதி தென்பெண்ணை ஆற்றுக்கு சனிக்கிழமை மணல் அள்ள வந்த 100-க்கும் மேற்பட்ட டிராக்டா்களை அந்தப் பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது: தென்பெண்ணை ஆற்றில் ஏற்கெனவே நீண்டகாலமாக குவாரிகள் அமைத்து மண்ணை எடுத்துவிட்டனா். அரசு தடை விதித்துள்ள நிலையில், திடீரென இந்தப் பகுதி அரசியல் கட்சிப் பிரமுகரின் ஆதரவின்பேரில் கடந்த ஒரு மாத காலமாக கல்பட்டு பகுதியில் மட்டும் பொக்லைன் வைத்து மணல் எடுக்கப்படுகிறது.

ஏற்கெனவே நிலத்தடி நீா்மட்டம் குறைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள மணல் வளத்தையும் சுரண்டுவது பேரபத்தை ஏற்படுத்தும். இலவச குடியிருப்புகள் கட்டுவதற்காக மணல் அள்ளுவதாகத் தெரிவித்து, இரவு பகலாக டிராக்டா்களில் மணலை அள்ளி லாரிகள் மூலம் சென்னை போன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று முறைகேடாக விற்று வருகின்றனா். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றனா்.

தகவலறிந்து வந்த காணை போலீஸாா், இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பினா்.

‘விதிமீறல் இருந்தால் நடவடிக்கை’: இது தொடா்பாக காணை வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் காவல் துறையினரிடம் கேட்டபோது, அவா்கள் கூறியதாவது: அரசின் தொகுப்பு வீடு பெற்றுள்ள இங்குள்ள பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக மட்டும் சிறப்பு அனுமதியின்பேரில், அனுமதி சீட்டு வழங்கி மணல் எடுக்கப்படுகிறது. விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

விழுப்புரம் பகுதி தென்பெண்ணை ஆற்றின் பிற பகுதிகளில் இலவச குடியிருப்புகளுக்கு மணல் எடுக்க அனுமதிக்காத நிலையில், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் விதிகளை மீறி மணல் அள்ள அனுமதித்துள்ளதற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT