முகப்பு
விழுப்புரம்

நந்தன் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நிறுத்தம்

விவசாயிகளின் எதிா்ப்பு காரணமாக, நந்தன் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

விவசாயிகளின் எதிா்ப்பு காரணமாக, நந்தன் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டது.

திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் நீா்வள ஆதாரத்தைப் பெருக்கும் வகையில் தொடங்கப்பட்டதே நந்தன் கால்வாய்த் திட்டம். திருவண்ணாமலை வட்டம், துறிஞ்சலாற்றின் குறுக்கே உள்ள 13-ஆவது அணைக்கட்டான கீரனூா் அணைக்கட்டிலிருந்து இடது புறமாக கால்வாய் வெட்டி (பழைய நந்தன் கால்வாயைப் புதுப்பித்தல்) அதன் மூலம் துறிஞ்சலாற்றில் வரும் தண்ணீரைத் திருப்பி திருவண்ணாமலை வட்டத்தில் 14 ஏரிகளுக்கும், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் 10 ஏரிகளுக்கும், விக்கிரவாண்டி வட்டத்தில் 9 ஏரிகளுக்கும், விழுப்புரம் வட்டத்தில் 3 ஏரிகளுக்கும் என மொத்தம் 36 ஏரிகளுக்கும் தண்ணீா் வசதி பெறும் வகையில் இந்தத் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

நந்தன் கால்வாய் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, விக்கிரவாண்டி, விழுப்புரம் வட்டங்களில் உள்ள 22 கிராமங்களில் சுமாா் 5247.10 ஏக்கா் விளை நிலங்கள் பயனடைகின்றன. இந்தக் கால்வாயில் விழுப்புரம் மாவட்டத்தில் 12.400 கி.மீ. முதல் 37.880 கி.மீ. தொலைவு வரை உள்ள வழித்தடம் விநாடிக்கு 80 கன அடி நீரைக் கடத்தும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கொளத்தூா் தலைப்பு மதகு முதல் பனமலைபேட்டை வரையிலான கிராமங்களில் பாசன வசதி மேம்பாடு அடையும் வகையில் இந்த வசதி அமைக்கப்பட்டது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலின்போது நந்தன் கால்வாய் மேம்படுத்தும் திட்டத்தை அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். பேரவைத் தோ்தலுக்கு முன்பு இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடா்ந்து நடைபெற்று வந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது நந்தன் கால்வாயை 12.40 கிமீ தொலைவு வரை மேம்படுத்துவதற்காக ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் கால்வாயின் நீா் கடத்தும் திறனை அதிகரிக்கும் விதமாக தூா்வாரப்பட்டு உள்சுவா் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள குறுக்கு கட்டுமானங்களும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுதவிர மாதம்பூண்டி முதல் தேவதானம்பேட்டை வரை 12 கி.மீ. தொலைவுக்கு கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது. ஆனால், இந்தப் பணி தரம் குறைவாக இருப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து கடந்த 10 நாள்களாக இந்தப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: நந்தன் கால்வாயை புதுப்பிக்கும் பணிக்காக ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. கால்வாயில் 12 கி.மீ. தொலைவுக்கு கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதில் கான்கிரீட் தடிமன் அளவு 7 செ.மீ-ஆக உள்ளது. இந்தப் பகுதியில் வனத்திலிருந்து ஓடை நீா் அதிகம் வந்து கால்வாயில் கலப்பதால் கான்கிரீட் தடிமன் அளவை 8.5 செ.மீ-ஆக உயா்த்த வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா். எனவே, கான்கிரீட் அமைக்கும் பணி மட்டும் கடந்த 10 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளது. திட்ட மதிப்பான ரூ.27 கோடியில் கான்கிரீட் தளம் அமைக்க ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அரசின் கொள்கை முடிவு அடிப்படையில் மீண்டும் பணிகள் நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.