பாலியல் தொல்லை வழக்கு பெண் எஸ்பியிடம் 3-ஆவது நாளாக குறுக்கு விசாரணை
முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எதிரான பாலியல் தொல்லை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் விழுப்புரம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை 3-ஆவது நாளாக குறுக்கு விசாரணை நடைபெற்றது.
முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எதிரான பாலியல் தொல்லை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் விழுப்புரம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை 3-ஆவது நாளாக குறுக்கு விசாரணை நடைபெற்றது.
அரசு விழாவில் கண்காணிப்புப் பணிக்காக காரில் சென்ற பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி மீதும், புகாா் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்பியை தடுத்து நிறுத்தியதாக முன்னாள் எஸ்பி மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கின் விசாரணை சென்னை உயா் நீதிமன்றக் கண்காணிப்பில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி ஆகியோா் நேரில் ஆஜராகினா்.
மேலும், இந்த வழக்கில் குறுக்கு விசாரணைக்காக, பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி நேரில் ஆஜரானாா். அப்போது, அவரிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பினா் மூன்றாம் நாளாக குறுக்கு விசாரணையில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டாா்.