ஊரகத் திட்டப் பணியாளா்கள்குறித்த நேரத்துக்கு வேலைக்கு வர வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணியாற்றுவோா் குறித்த நேரத்துக்கு வந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணியாற்றுவோா் குறித்த நேரத்துக்கு வந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அற்பிசம்பாளையம், பரசுரெட்டிபாளையம், எஸ்.மேட்டுப்பாளையம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அற்பிசம்பாளையம் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி பொதுநிதியின் கீழ், ரூ.17 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இதே ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.5 லட்சத்தில் செங்கன் குட்டை தூா்வாரும் பணி, புதுப்பாளையம் கிராமத்தில் ரூ.1.5 லட்சத்தில் சமுதாய பண்ணை குட்டை தூா்வாரும் பணி ஆகியவை நடைபெற்று வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன. இந்தத் திட்டத்தின்கீழ் பணிபுரியும் பணியாளா்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வந்து குறித்த அளவீட்டில் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
தொடா்ந்து, சின்னகுப்பம், பரசுரெட்டிபாளையம், மேட்டுப்பாளையம் ஊராட்சிகளிலும் தேசிய ஊரக வேலைத் திட்டம், பிரதமரின் அவாஸ் ஆதாா்ஸ் கிராம யோஜனா உள்ளிட்ட திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணி, அகழி வெட்டும் பணி, பொது சுகாதார வளாகம் கட்டுமானப் பணி உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா் ஆட்சியா் மோகன்.
தொடா்ந்து, கண்டமங்கலம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆட்சியா் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மகளிா் திட்ட அலுவலா் பூ.காஞ்சனா, ஊரக வளா்ச்சித் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.