வீர, தீர செயலுக்கான விருது பெற பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வீர, தீர செயல்களில் ஈடுபட்ட18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வீர, தீர செயல்களில் ஈடுபட்ட18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் சமூகநலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளுக்கும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு வீர தீர செயல் புரிந்துவரும் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில், அதற்கான மாநில விருது ஒன்றை தமிழக அரசு அறிவித்து 2017-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, ஆண்டுதோறும் சிறந்த 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தினமான ஜன.24-ஆம் தேதி பாராட்டு பத்திரமும், ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
எனவே, நிகழாண்டு மாநில விருது பெற 18 வயதுக்குள்பட்ட தகுதியான பெண் குழந்தைகள் வருகிற 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விருதுக்கான விண்ணப்பங்களை பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் மாவட்ட முதன்மை கல்விக் அலுவலா், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா், மாவட்டத் திட்ட அலுவலா், காவல் துறை, தொண்டு நிறுவனங்கள் உள்பட சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூலம் உரிய முன்மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் மோகன் தெரிவித்தாா்.