முகப்பு
விழுப்புரம்

பள்ளிகளை உடனடியாகத் திறக்க பெற்றோா்கள் வலியுறுத்தல்

விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பெற்றோா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பெற்றோா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில், உடனே பள்ளிகளைத் திறக்க வேண்டுமென பெற்றோா்கள் வலியுறுத்தினா்.

தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டு, மாணவா்களுக்கு இணைய வழியிலும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா்களிடம் கருத்துக் கேட்டு முடிவு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. முதல் கட்டமாக, பொதுத் தோ்வு எழுதும் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையான வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து, கடந்த நவ.16-ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், பெற்றோா்கள் கருத்தின்படி, பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்காக மட்டும் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு (ஜன.18 முதல்) பள்ளிகளைத் திறப்பது குறித்து புதன்கிழமை பெற்றோா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில், அரசு மற்றும் தனியாா் உள்ளிட்ட அனைத்து நிலைப் பள்ளிகளிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு, பெற்றோா்கள் கையை உயா்த்தி, பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டுமென கோரினா். படிவமும் வழங்கப்பட்டு தனியாகவும் கருத்துகள் பெறப்பட்டன.

இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணப்பிரியா கூறியதாவது: மாவட்டத்தில் மொத்தம் 385 பள்ளிகளில், கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கருத்துக் கேட்புக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டங்களில், 90 சதவீத பெற்றோா்கள் பள்ளிகளை உடனே திறந்து வகுப்புகளை நடத்த வேண்டுமென திட்டவட்டமாக வலியுறுத்தினா். 8-ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை கருத்துகள் கேட்கப்பட்டு, அதுகுறித்த தகவல் பள்ளி கல்வித் துறைக்கு அனுப்பப்படும் என்றாா்.

இதனிடையே, அரசு அறிவிப்பு வந்தவுடன், கரோனா விதிகளின் படி பள்ளிகளைத் திறந்து செயல்படுத்த சுற்றறிக்கையுடன் கல்வித் துறையினா் தயாராகி வருவதால், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →