முகப்பு
விழுப்புரம்

இலவச வீடு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி முன்னாள் தலைவருக்கு 4 ஆண்டுகள் சிறை

இலவச வீடு கட்டும் திட்டத் தவணைத் தொகை வழங்குவதற்கு பயனாளியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

இலவச வீடு கட்டும் திட்டத் தவணைத் தொகை வழங்குவதற்கு பயனாளியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

செஞ்சி அருகே தேவதானம்பேட்டையைச் சோ்ந்தவா் பச்சையப்பன் மனைவி சுதா (35). இவருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு, இந்திரா காந்தி நினைவு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டது. வீடு கட்ட முதல் தவணைத் தொகை ரூ.59,541-க்கான காசோலையை சுதாவிடம் வழங்க, அப்போதைய ஊராட்சி மன்ற தலைவராக இருந்த அதே ஊரைச் சோ்ந்த ஆறுமுகம் (52), சுதாவிடம் ரூ.10ஆயிரம் லஞ்சம் கேட்டாா். இதுகுறித்து சுதா விழுப்புரம் ஊழல் தடுப்பு-கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் செய்தாா்.

கடந்த 21.8.2014-ஆம் தேதி போலீஸாரின் அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை சுதா, ஆறுமுகத்திடம் கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஆறுமுகத்தை கையும் களவுமாக கைது செய்தனா்.

விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஆறுமுகத்துக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து ஆறுமுகம் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.