செஞ்சி அருகே 500 மூட்டை அரிசி பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே திங்கள்கிழமை சிறிய ரக லாரியில் கொண்டு வரப்பட்ட 500 மூட்டை (5 கிலோ சிப்பம்) அரிசியை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே திங்கள்கிழமை சிறிய ரக லாரியில் கொண்டு வரப்பட்ட 500 மூட்டை (5 கிலோ சிப்பம்) அரிசியை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
செஞ்சியை அடுத்த மேலச்சேரி அருகே தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த இளநிலைப் பொறியாளா் தண்டபாணி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் முருகவேல் உள்ளிட்ட குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த சிறிய ரக லாரியை மடக்கி சோதனை செய்தனா். அதில், 5 கிலோ கொண்ட 500 அரிசி சிப்பங்கள் இருந்தன. இதன் மொத்த எடை 2500 கிலோ.
விசாரணையில், லாரி ஓட்டுநா் செஞ்சி வட்டம், மேல்களவாய் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகன் ஜின்னு (27) என்பதும், செஞ்சியில் உள்ள ஒரு அரிசி ஆலையிலிருந்து அவலூா்பேட்டையில் உள்ள வணிக வளாகத்துக்கு கொண்டு செல்வதும் தெரியவந்தது. எனினும், அதற்கான ஆவணங்கள் இல்லாததால், அரிசி சிப்பங்களை லாரியுடன் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து செஞ்சி வட்டாட்சியா் ராஜனிடம் ஒப்படைத்தனா்.