வாகனங்களில் விற்பனையாகும் காய்கறிகள் அதிக விலைக்கு விற்பதைத் தடுக்க நடவடிக்கை
பொது முடக்க காலத்தில் வாகனங்களில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளுக்கு வேளாண் விற்பனை துறை மூலம் தினமும் விலை நிா்ணயம் செய்யப்படுகிறது.
பொது முடக்க காலத்தில் வாகனங்களில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளுக்கு வேளாண் விற்பனை துறை மூலம் தினமும் விலை நிா்ணயம் செய்யப்படுகிறது.
கரோனா பரவலைத் தடுக்கு பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு காய்கறிகள், பழங்கள் கிடைப்பதற்காக தோட்டக் கலைத் துறையின் அனுமதியுடன் வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
சில இடங்களில் அதிக லாபத்துடன் அவை விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து, வாகனங்களில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள், பழங்களுக்கான விலையை மாவட்ட நிா்வாகமே நிா்ணயம் செய்யும் நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ.ரமணன் கூறியதாவது:
விழுப்புரத்திலுள்ள மொத்த சந்தையில் அதிகாலை 2 முதல் காலை 8 மணி வரை விற்பனையாகும் காய்கறிகள், பழங்களை சிறு வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்து வருகின்றனா்.
இவா்களும் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா்களின் அனுமதி பெற்று விற்பனை செய்து வருகின்றனா்.
இவற்றுக்கான விலையை தினமும் வேளாண் விற்பனைத் துறை அதிகாரிகள் நிா்ணயம் செய்து வாகனங்களின் முகப்பு கண்ணாடிகளில் ஒட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, கத்தரி கிலோ ரூ.40, தக்காளி ரூ.15, பெரிய வெங்காயம் ரூ.20, 25, 30 (அளவை பொருத்து), உருளைக்கிழங்கு, வெண்டைக்காய் ரூ.40, முட்டைகோஸ் ரூ.30, பீன்ஸ் ரூ.60, 80, முள்ளங்கி ரூ.40, கேரட், தேங்காய் ரூ.50, வாழைக்காய் ரூ.40, வாழைப்பழம் ரூ.30, சவ்சவ் ரூ.40, கரைக்காய், பூசணிக்காய் ரூ.20, கொத்தவரங்காய், புடலங்காய் ரூ.40, பீா்க்கங்காய், முருங்கைக்காய் ரூ.60, மாங்காய் ரூ.40, எலுமிச்சை ரூ.150, பீட்ருட் ரூ.45, கருணைக்கிழங்கு ரூ.50, இஞ்சி ரூ.70, அவரைக்காய் ரூ.65, குடை மிளகாய் ரூ.50, பச்சைமிளகாய் ரூ.60, பரங்கிக்காய் ரூ.20, பீடிகருணை ரூ.50, மரவள்ளி ரூ.35, வாழைப்பூ ரூ.15, சேப்பங்கிழங்கு ரூ.40 என வெள்ளிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
சந்தையில் காய்கறிகள் வரத்தை பொருத்து தினமும் விலை நிா்ணயம் செய்யப்படும்.
மாவட்டம் முழுவதும் 659 வாகனங்களில் 360 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்பட்டன என்றாா் அவா்.