விற்பட்டில் தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி: அதிகாரிகள் பேச்சுவாா்த்தை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி, விற்பட்டு கிராம மக்கள் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனா். அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி, விற்பட்டு கிராம மக்கள் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனா். அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியம், அவியூா் ஊராட்சியில் விற்பட்டு, சேதுவராயநல்லூா் ஆகிய கிராமங்கள் உள்ளன. அவியூா் ஊராட்சியில் 1300 வாக்காளா்கள் உள்ளனா். குறைந்த அளவிலான வாக்காளா்கள் உள்ள விற்பட்டு, சேதுவராயநல்லூரைச் சோ்ந்தோா் தோ்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியவில்லை. மேலும், தங்களுக்கு அவியூா் ஊராட்சி மூலம் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை என்று விற்பட்டு கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.
விற்பட்டை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி, செவ்வாய்க்கிழமை இரவு கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக வியாழக்கிழமை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
செஞ்சி வட்டாட்சியா் ராஜன், வல்லம் வட்டார வளா்ச்சி அலுவலா் நீலவேணி உள்ளிட்டோா் விற்பட்டு கிராமத்துக்குச் சென்று, தனி ஊராட்சியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். ஆனால், இந்தத் தோ்தலிலேயே தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியதால், பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெறவில்லை.