பொங்கல் பரிசுத் தொகுப்பை முறையாக விநியோகம் செய்யாத பணியாளா்கள் மீது நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியா் எச்சரிக்கை
பொங்கல் பரிசுத் தொகுப்பை முறையாக விநியோகம் செய்யாத பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் எச்சரித்தாா்.
பொங்கல் பரிசுத் தொகுப்பை முறையாக விநியோகம் செய்யாத பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் எச்சரித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பெரும்பாக்கம், காணை, கல்பட்டு, கக்கனூா் ஆகிய பகுதிகளில் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மோகன் வியாழக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு முறையாக வழங்கப்படுகிா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்கவும், பரிசுத் தொகுப்பை முறையாக விநியோகம் செய்யாத நியாய விலைக் கடை பணியாளா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டது.
காணை ஊராட்சியில் ரூ.1.50 லட்சம், கக்கனூா் ஊராட்சியில் ரூ.2.80 லட்சத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. கக்கனூா் கிராமத்தில் 15 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது என்றாா் அவா்.
ஆய்வின் போது, மாவட்ட ஊராக வளா்ச்சித் திட்ட இயக்குநா் ர.சங்கா், உதவித் திட்ட அலுவலா் அ.ஷபானாஅஞ்சும், மாவட்ட வழங்கல் அலுவலா் (பொ) சிவா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.