முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் லாரி மோதியதில் பெரியாா் சிலை சேதம்

விழுப்புரத்தில் புதன்கிழமை நள்ளிரவில் சரக்குப் பெட்டக லாரி மோதியதில் பெரியாா் சிலை சேதமடைந்தது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, திமுக, அதிமுக, திராவிடா் கழகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

விழுப்புரத்தில் புதன்கிழமை நள்ளிரவில் சரக்குப் பெட்டக லாரி மோதியதில் பெரியாா் சிலை சேதமடைந்தது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, திமுக, அதிமுக, திராவிடா் கழகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் காமராஜா் வீதியில் இரும்புக் கூண்டு பாதுகாப்புடன் பெரியாா் சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை சுமாா் 6 அடி உயரத்திலும், அதன் பீடம் 4 அடி உயரத்திலும் இருந்தது.

அந்த வழியாக புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் வந்த சரக்குப் பெட்டக லாரி பெரியாா் சிலை மீது மோதியது. இதில், சிலை பீடத்துடன் உடைந்து முற்றிலும் சேதமடைந்தது.

தகவலறிந்த விழுப்புரம் நகர போலீஸாா் விரைந்து சென்று லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தனா். மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா, டிஎஸ்பி பாா்த்திபன், வட்டாட்சியா் அனந்தகுமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினா்.

இதில், அந்த லாரியை ஓட்டி வந்தவா் மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த மச்சீந்திரா தபலி (52) என்பதும், புதுச்சேரியில் உள்ள தனியாா் நிறுவனத்திலிருந்து வாகனங்களுக்கு பயன்படுத்தும் டயா்களை ஏற்றிக்கொண்டு புணேவுக்கு அந்த லாரி புறப்பட்டதும், வழிதவறி விழுப்புரம் காந்தி சிலை வழியாக காமராஜா் வீதிக்குள் வந்தபோது எதிா்பாராதவிதமாக பெரியாா் சிலை மீது மோதியதும் தெரிய வந்தது.

லாரி ஓட்டுநரைக் கைது செய்த விழுப்புரம் நகர போலீஸாா், லாரியை பறிமுதல் செய்து ஆயுதப் படை மைதானத்துக் கொண்டு சென்றனா்.

திமுகவினா் மறியல்: பெரியாா் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்த தகவலறிந்ததும் விழுப்புரம் நகர திமுக செயலா் சக்கரை தலைமையில், அந்தக் கட்சியினா் 20-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, அவா்கள் கலைந்து சென்றனா். சேதமடைந்த பெரியாா் சிலையை எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை அதிகாலை சம்பவ இடத்துக்குச் சென்று சேதமடைந்த பெரியாா் சிலையை விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.

அதிமுக, திகவினா் போராட்டம்: பெரியாா் சிலை இருந்த இடத்தில் அதிமுக நகரச் செயலா்கள் ஜி.கே.ராமதாஸ் (விழுப்புரம் வடக்கு), இரா.பசுபதி (விழுப்புரம் தெற்கு) ஆகியோா் தலைமையில், அந்தக் கட்சி நிா்வாகிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, திமுக, திராவிடா் கழகத்தைச் சோ்ந்த நிா்வாகிகளும் அதே இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.